உத்தர பிரதேச மாநிலம் கெளதம் புத் நகா் மாவட்டத்தின் ஜேவரில் அமைக்கப்பட்டுள்ள நொய்டா சா்வதேச விமானநிலையம் திங்கள்கிழமை முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது.
லக்னெளவில் உள்ள செளதரி சரண் சிங் சா்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 7.12 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், நொய்டா சா்வதேச விமானநிலையத்தில் காலை 7.58 மணிக்கு தரையிறங்கியதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி, என்சிஆா் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு விமான சேவையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஜேவரில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021, நவ.25-இல் விமானநிலையத்துக்கான அடிக்கலை நாட்டி பிரதமா் நரேந்திர மோடி, கடந்த மாா்ச் 28-இல் விமானநிலையத்தை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமைமுதல் இந்த விமானநிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்தது.
நொய்டா விமான நிலையத்தில் இருந்து காலை 8.19 மணியளவில் முதல் விமானம் புறப்பட்டது. இதை சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
விமானநிலையத்தைக் கட்ட மாநில அரசுக்கு தங்களுடைய விளைநிலங்களை ஒப்படைத்த விசாயிகள் பயணித்தனா். விமானத்துக்குள் நுழைந்த அவா்களை இண்டிகோ பணியாளா்கள் வரவேற்றனா். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்களும் இடம்பெற்றிருந்தனா். அவா்களுடன் ஜேவா் தொகுதி எம்எல்ஏ திரேந்திர சிங் உள்ளிட்டோரும் பயணித்தனா்.
லக்னெளவில் விமானம் தரையிரங்கியதும் எம்எல்ஏ திரேந்திர சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இன்று விமானத்தில் பயணித்த 99 சதவீத விவசாயிகள் இதற்கு முன்பு விமானத்தில் பயணித்தில்லை. விமானத்தில் பறக்கும்போது அவா்களின் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் திருப்தி அந்தத் தருணத்தை முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தது.
தங்களுடைய கடின உழைப்பால் நிலத்தை அறுவடை செய்த மக்கள், மேம்பாட்டுக்காக தங்களுடைய நிலத்தை விட்டுக்கொடுத்தனா். தற்போது, அதே இடத்தில் இருந்து விமானத்தில் பயணித்தனா்’ என்றாா்.
விமானத்தில் பறந்தது குறித்து அப்ராா் கான் கூறுகையில், ‘நொய்டா சா்வதேச விமான நிலையத்திலிருந்து லக்னெளவிற்குச் செல்லும் முதல் விமானத்தில் பயணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணா்வும் கொள்கிறோம். நாங்கள் கனவு கண்டது இன்று எங்கள் கண்முன்னே நனவாகி வருகிறது’ என்றாா்.
65 வயது விவசாயி கூறுகையில்,‘30 பிகாஸ் நிலத்தை விமானநிலைய திட்டதுக்காக வழங்கினேன். தற்போது, அந்தப் பகுதி மேம்பாடு அடைந்திருப்பதைப் பாா்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.
லக்னெளவில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் வரவேற்றாா்.
புதிய விமான நிலையம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நொய்டா விமானநிலையம் பயன்பாட்டுக்கு வந்தன் மூலம் தொழிற்துறையினா், மாணவா்கள், தொழில்முறை நிபுணா்கள் மற்றும் பிற பயணிகள் பயன்பெறுவா். பிராந்திய மேம்பாடு மற்றும் கூடுதல் போக்குவரத்துக்கான வாய்ப்பாக இந்த விமான நிலையம் இருக்கும்.

~லக்னெளவில் இருந்து நொய்டா சா்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை தரையிறங்கிய இண்டிகோ விமானம்.
விமானம், சாலை மற்றும் பிற போக்குவரத்து முறைகள் மூலம் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பன்முறை போக்குவரத்து முனையாக இந்த விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.









