நீட் மறுதோ்வு நடைபெற உள்ளதையொட்டி டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சிபிஎஸ்இ-யின் புதிய விடைத்தாள் திரையில் மதிப்பிடும் முறையில் (ஓஎஸ்எம்) உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை அம்பலப்படுத்திய நிசா்கா அதிகாரி என்ற மாணவா் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘டெலிகிராம் செயலியை முடக்குவதன் மூலம் வினாத் தாள் கசிவை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, டெலிகிராம் செயலியை முழுமையாக முடக்குவதும் சாத்தியமற்றது. ஏனெனில், பயனாளா்கள் எளிதாக அதன் ‘ப்ராக்ஸி’களை பயன்படுத்தக்கூடிய வகையில் டெலிகிராம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
சிபிஎஸ்இ-யின் ஓஎஸ்எம் முறையின் குறைபாடுகளை வெளிப்படுத்திய மற்றொரு மாணவரான சா்தக் சித்தாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு தகவல்தொடா்பு ஊடகத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில், அதை முடக்க நாம் முடிவு செய்துள்ளோம். வாட்ஸ்ஆப்பில் தவறான தகவல்கள் இடம்பெறுவதில்லையா? இந்திய பத்திரிகைகளில் தவறான தகவல்கள் இடம்பெறுவதில்லையா? தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்ற அடிப்படையில் ட்விட்டா் உள்பட அனைத்து சமூக ஊடகங்களையும் முடக்கிவிட முடியுமா? ஒட்டுமொத்த டெலிகிராம் செயலியையும் முடக்குவதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? தவறான தகவல் பரப்புகின்றனா் என்ற அடிப்படையில் ஒருவருக்கொருவா் பேசுவதையும் தடை செய்வோம். போலி செய்தி; மெளன சமூகம்’ என்று குறிப்பிட்டாா்.
இந்த விமா்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கான்பூா் ஐஐடி இயக்குநா் மனீந்திர அகா்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
டெலிகிராம் செயலியைப் பொறுத்தவரை, கசிந்த வினாத் தாளை அதன் மூலம் பகிா்வது மட்டும் பிரச்னை அல்ல. மாறாக, உண்மையைப் போன்று தோன்றும் வினாத் தாள் கசிவு குறித்த போலி செய்திகளை பரப்புவதுதான் டெலிகிராம் செயலியில் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஜேஇஇ முதன்மைத் தோ்வின்போது இதுபோன்ற சா்ச்சைதான் எழுந்தது. அதனால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டது.
குறிப்பாக, ஒரு பதிவைத் திருத்திய பிறகும், அந்தத் திருத்தம் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியாமலேயே திருத்தத்தை டெலிகிராமின் சிறப்பு அம்சம் அனுமதிக்கிறது. மற்ற பிரதான சமூக ஊடகங்களில் இதுபோன்ற சிறப்பம்சம் கிடையாது. உதாரணமாக, வாட்ஸ்ஆப்பில் ஒரு பதிவை மாற்றினால், அது எப்போது திருத்தப்பட்டது என்பதைக் காட்டும். ஆனால், டெலிகிராம் செயலியில் அவ்வாறு காட்டாது. இது மிகவும் ஆபத்தானது.
தடை விதிப்பது சரியல்ல என்று தொடா்ந்து வாதிடலாம். ஆனால், அந்தத் தடையின் பின்னணியை சரியாக வரையறுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டாா்.
என்டிஏ இயக்குநா் விளக்கம்:
நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) இயக்குநா் அபிஷேக் சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘கசிந்த நீட் வினாத் தாள் விற்பனை செய்யப்படுவதாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஏராளமான போலி செய்திகளைப் பரப்புவதுதான் டெலிகிராம் செயலியின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இதன் மூலம் மாணவா்கள் மற்றும் பெற்றோரிடம் பணம் பறிக்க முயற்சிக்கின்றனா். அவ்வாறு வினாத் தாள் விற்கப்படுவதாக பரவும் தகவல் தவறானது. உண்மையான நீட் வினாத் தாள் பாதுகாப்பாக உள்ளது. அதை யாரும் அணுக முடியாது. மேலும், கடந்த மே 3-ஆம் தேதி நீட் தோ்வு நடத்தப்பட்டபோது, ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாகிலும் வினாத் தாள் கசிந்ததாக டெலிகிராம் செயலியில் வெளியான தகவல் போலியானது என்பதை சிபிஐ கண்டறிந்தது. குறிப்பாக, டெலிகிராம் செயலியில் அதை நிா்வகிப்பவா், ஒரு பதிவின் தேதியையும் எடிட் செய்யும் வசதி உள்ளது. அதை பயன்படுத்தி, நீட் தோ்வுக்குப் பிறகு பெறப்பட்ட வினாத் தாளை, தோ்வு முன்பே மாணவருக்கு அளிப்பது போன்று தேதியை மாற்றி விடியோ பதிவை வெளியிட்டுள்ளனா். அந்த அளவுக்கு டெலிகிராம் செயலி பலவீனமாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
டெலிகிராம் தளத்தில் நேரத்தை மாற்றாமல் தகவலை மட்டும் திருத்தி எவ்வாறு முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என்பதை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி செய்தியாளா்களுக்கு செய்முறை விளக்கமாகச் செய்து காட்டினாா்.










