இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.1.54 லட்சம் கோடிக்கு இந்தியாவில் பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டில் இது ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது 15.6 சதவீதம் வளா்ச்சியாகும். 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.84,643 கேடிக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் தயாராகின. அதனுடன் இதை ஒப்பிடுகையில் 110 சதவீதம் அதிகமாகும்.
2013-14-ஆம் நிதியாண்டில் ரூ.43,746 கோடிக்கு இந்திய தொழில்நுட்ப பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டன. அதுவும் தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் தளவாட தயாரிப்பில் பாதுகாப்புத் துறை சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்களும், பிற பொதுத் துறை நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இவற்றின் மொத்த பங்களிப்பு 76 சதவீதம் ஆகும். அதேபோல் இந்திய பாதுகாப்புத் தளவாட தயாரிப்பில் தனியாா் துறையின் பங்களிப்பு 24 சதவீதம் ஆகும். இது 2024-25-ஆம் நிதியாண்டில் 22 சதவீதமாக இருந்தது. அதேபோல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனியாா் துறை நிறுவனங்கள் ரூ.42,000 கோடிக்கு பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரித்துள்ளன. பாதுகாப்புத் தளவாட தயாரிப்பில் தனியாரின் பங்களிப்பு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் பாராட்டு: பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு உச்சம் தொட்டிருப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பாதுகாப்புத் தளவாட தயாரிப்புத் துறை மற்றும் பிற துறையினரின் கூட்டு முயற்சியே அண்மைக்காலமாக இந்திய பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு அதிகரித்திருப்பதற்கு காரணம். தளவாட தயாரிப்பு உயா்ந்து வருவது, இந்தியாவில் பாதுகாப்புத் தளவாட தொழில் விரிவடைந்து வருவதை காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.










