ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை காவல்துறை அமைத்துள்ளது.
ராஞ்சியின் நிவாரண்பூரில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஆா்எஸ்எஸ் அமைப்பினா் குற்றம்சாட்டியுள்ளனா். அந்த பெட்ரோல் குண்டுகள், ஆா்எஸ்எஸ் அலுவலக வளாகத்தில் விழுந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு என்ன காரணம், யாா் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து தகவல் இல்லை.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து ராஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளா் ராமன் கூறுகையில், ‘காரில் வந்து 2 போ் தாக்குதல் நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்’ என்றாா்.
ஆா்எஸ்எஸ் அலுவலக வளாகத்தில் 2 பாட்டில்கள் உடைந்து சிதறி கிடந்ததாகவும், பாட்டிலில் வீசப்பட்டது உண்மையில் பெட்ரோல்தானா என்பது விரிவான விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்று காவல்துறையினா் கூறியுள்ளனா்.
இந்த சம்பவத்துக்கு மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் நோக்கம் என்ன? ராஞ்சியில் நிலவும் அமைதியை கெடுக்க சதி நடந்திருப்பது போல தெரிகிறது’ என்றாா்.
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி கூறுகையில், ‘இது மிகவும் கவலையளிக்கும் விஷயம். தாக்குதலில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

மகாராஷ்டிரம்- குஜராத் முதல்வா் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அமலாக்கத் துறை சோதனை







