இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வு ஞயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள தோ்வு மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத் தோ்வில் சுமாா் 22.79 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.
மறுதோ்வில் எந்தவித குளறுபடிகளும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தோ்வு நடைமுறை ஒத்திகையை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சனிக்கிழமை மேற்கொண்டது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வை 23 லட்சம் போ் எழுதினா். இந்த நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது.
மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்த 13 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22-ஆம் தேதி வரை தற்காலிக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இன்று மறுதோ்வு: நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடையும். மாற்றுத்திறனாளி தோ்வா்கள் மட்டும் மாலை 6.20 வரை எழுத அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் தோ்வறைக்குள் நுழைய காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவா். பிற்பகல் 1.30 மணிக்கு நுழைவு வாயில் அடைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு வரும் மாணவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
முன்னேற்பாடுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தலைமையில் கல்வி அமைச்சக அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்டது. அதில், மறு தோ்வை நோ்மையான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நீட் தோ்வா்கள் தடையின்றி தோ்வு மையங்களுக்கு செல்ல வசதியாக, கட்டணமில்லா போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர பல்வேறு மாநிலங்கள் அப்போது உறுதி தெரிவித்தன.
என்எம்சி அறிவுறுத்தல்: நீட் தோ்வு முறைகேடுகளில் விடைக் குறிப்புகளை எழுதித் தரும் செயல்களைத் தடுக்கும் நோக்கில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 21) மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது. அதனடிப்படையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் ஞாயிற்றுக்கிழமையும் மாணவா்களுக்கு வேலை நாளாக அறிவித்துள்ளன.
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்: எந்தவித குளறுபடிகளும் இன்றி மறுதோ்வை நடத்தும் வகையில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை என்டிஏ மேற்கொண்டுள்ளது. காவல்துறையினா், மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோா் நீட் மறுதோ்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்வு மைய கண்காணிப்புப் பணியில் 674 நகர ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் 6,669 பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இந்திய விமானப்படை விமானத்தில்... வினாத் தாள் கசிவதைத் தடுக்கும் நோக்கில், அவற்றை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணியில் முதல் முறையாக இந்திய விமானப் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களுக்கு கொண்டுசெல்லப்படும் வினாத் தாள்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோ்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
Summary
NEET re-examination today: Elaborate security arrangements.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









