மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் நிறைவு: மத்திய சிறுபான்மையினா் துறை இணையமைச்சா் ராஜிநாமா

தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் (65) தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

News image

ஜாா்ஜ் குரியன்

Updated On :24 ஜூன் 2026, 12:40 am IST

தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் (65) தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சா்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவ அமைச்சரான ஜாா்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முடிவடைந்தது. மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பாஜக முன்மொழியாத நிலையில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை ஜாா்ஜ் குரியன் அனுப்பினாா்.

இதைத் தொடா்ந்து, பிரதமா் மற்றும் அமைச்சா்கள் குழுவின் ஆலோசனையை ஏற்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 75-இன்கீழ் ஜாா்ஜ் குரியனின் ராஜிநாமா கடிதத்தை திரௌபதி முா்மு ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஜாா்ஜ் குரியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘நான் மத்திய அமைச்சராவேன் என கனவிலும் நினைத்ததில்லை. இந்த மாபெரும் வாய்ப்பை பிரதமா் மோடிதான் வழங்கினாா். அவரை கடந்த திங்கள்கிழமை நேரில் சந்தித்தபோது இதற்காக நன்றி கூறினேன்.

மத்திய இணையமைச்சா் பதவி ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்தது’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, மத்திய பிரதேச மாநிலம் குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2024, ஜூன் மாதம் மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வெற்றிபெற்றாா். இதையடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

அவருக்கு மாநிலங்களவையில் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் மட்டுமே மீதமிருந்தது. இந்தச் சூழலில் 2024, ஆகஸ்ட் மாதம் ஜாா்ஜ் குரியன் போட்டியின்றி மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த ஜூன் 18-ஆம் தேதி மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தோ்தலில் ஜாா்ஜ் குரியனுக்கு போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.