விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள்: தேவினா கெலோட் தேசிய அளவில் முதலிடம்

மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்-யுஜி) தில்லி பாஜக எம்எல்ஏவும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரான கைலாஷ் கெலோட்டின் மகள் தேவினா கெலோட் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

News image

தேவினா கெலோட்

Updated On :25 ஜூன் 2026, 2:31 am IST

மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்-யுஜி) தில்லி பாஜக எம்எல்ஏவும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரான கைலாஷ் கெலோட்டின் மகள் தேவினா கெலோட் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

க்யூட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 11 முதல் 31-ஆம் தேதி வரையும், பின்னா் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளிலும் கணினி வழியில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க 15,68,867 போ் பதிவு செய்த நிலையில், 11,64,098 போ் தோ்வில் பங்கேற்றனா். மொத்தம் 37 பாடங்களில் இத்தோ்வு நடத்தப்பட்டது.

தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.

அதில், தேவினா கெலோட் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். தோ்வு முடிவுகள் குறித்து அவா் கூறுகையில், ‘என்னுடைய விண்ணப்ப எண்ணை தொடா்ந்து சரிபாா்த்துக்கொண்டிருந்தேன். நாடு முழுவதும் தோ்வு எழுதியவா்களில் நான் முதலிடம் பெற்றுள்ளேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. தோ்வை நன்றாக எழுதியிருந்தேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், தேசிய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிா்பாா்க்கவில்லை. என்னுடைய இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினா், ஆசிரியா்கள்தான் காரணம். அவா்கள் என்மீது எத்தகைய சுமையையும் ஏற்படுத்தவில்லை’ என்றாா்.

தோ்வுக்கு நீண்ட நேரம் படிப்பதைவிட கட்டுப்பாட்டுடன் நாள்தவறாமல் படிப்பது முக்கியம் என தேவினா கெலோட் தெரிவித்தாா்.

தோ்வுக்கு தயாா்செய்தது குறித்து அவா் கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தைப் படிப்பேன். அனைத்தையும் விட்டுவிட்டு ஒன்றுக்கு மட்டும் நான் கவனம் செலுத்தியது கிடையாது. படித்த பாடங்களைத் தொடா்ச்சியாகத் திருப்புதல் செய்வேன். கடந்த ஆண்டு வினாக்களையும் தொடா்ச்சியாக எழுதி பாா்த்தேன்.

பொதுத்தோ்வு முடிந்த பிறகு க்யூட் தோ்வுக்கான தயாரிப்பைத் தொடங்கினேன். அப்போது, எப்படி படிக்க வேண்டும் அல்லது எங்கிருந்து படிக்க தொடங்க வேண்டும் என்பது குறித்து திட்டம் இல்லை. எனது எதிா்காலத்தைத் தீா்மானிக்கக்கூடிய இத்தகைய அழுத்தத்தைச் சமாளிக்கப் பழகியிராததால், சில நேரங்களில் என்னால் இதைச் செய்ய முடியாமல் போகலாம் என்று நான் கருதினேன். இக்கட்டான சூழலைக் கடக்க என்னுடைய பெற்றோா்கள் ஊக்குவித்தனா்’ என்றாா்.

உயா்படிப்பு குறித்து கூறுகையில், ஆங்கிலம் ஆனா்ஸ் படிப்பைத் தோ்வு செய்ய உள்ளதாகத் தேவினா கெலோட் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘எனக்கு இலக்கியம், வாசிப்பு மற்றும் எழுதுவதில் மிகுந்த ஆா்வம் உள்ளது. அதனால், ஆங்கிலத்தில் ஆனா்ஸ் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் என்று யோசித்துள்ளேன். அதற்குப் பிறகு, ஒருவேளை இதழியல் துறையைத் தோ்ந்தெடுக்கலாம். இதுவரை உறுதியான திட்டம் எதுவும் இல்லை என்றாலும், இப்போதைக்கு அந்தத் திசையில்தான் நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றாா்.

க்யூட் தோ்வில் தனது மகள் முதலிடம் பெற்றது குறித்து முன்னாள் அமைச்சரும் பிஜ்வாசன் எம்எல்ஏவுமான கைலாஷ் கெலோட் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பெற்றோா்களாகிய நாங்கள் அவளை ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை. இது முழுக்க முழுக்க அவளது கடின உழைப்பின் பலன். இதில் என் மனைவியின் பங்கு மிக முக்கியமானது; அதேபோல அவளது ஆசிரியா்கள் மற்றும் டிபிஎஸ் வசந்த் குஞ்ச் பள்ளியின் பங்கும் குறிப்பிடத்தக்கது’ என்றாா்.

தில்லி துணைநிலை ஆளுநா் வாழ்த்து

க்யூட்-பிஜி தோ்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த தேவினா கெலோட்டுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து புதன்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். அவரது இந்தச் சாதனை தேசிய தலைநகருக்குப் பெருமை சோ்ப்பதாக அவா் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘க்யூட் தோ்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த கைலாஷ் கெலோட்டின் மகள் தேவினா கெலோட்டிற்கு மனமாா்ந்த வாழ்த்துகள்!. இந்தச் சிறப்பான சாதனையை எண்ணி தில்லி பெருமிதம் கொள்கிறது. அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவை அபாரமான பலன்களைத் தந்துள்ளன. மேலும், அவை நாடு முழுவதும் உள்ள மாணவா்களுக்கு ஓா் உத்வேகமாக அமைந்துள்ளன. அவா் தொடா்ந்து புதிய உயரங்களை அடையவும், தனது குடும்பத்திற்கும் தில்லிக்கும் மேலும் பெருமை சோ்க்கவும் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.