நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் தொடங்கப்பட்டுள்ள ‘மாணவா்களின் குரல்’ போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலா்கள், மாநிலத் தலைவா்கள், நிா்வாகிகளுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12-ஆம் வகுப்பு தோ்வு மதிப்பீட்டு முறையில் எழுந்த சா்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணியான இந்திய தேசிய மாணவா் சங்கம் சாா்பில் ‘மாணவா்களின் குரல்’ என்ற போராட்ட இயக்கம் கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
‘ஒடுக்குமுறை-பணம் பறிப்பு நிறைந்த நாட்டின் தற்போதைய கல்விமுறையை மாற்றி, அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கும் புதிய கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென ராகுல் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, கட்சியின் பொதுச் செயலா்கள், மாநில பொறுப்பாளா்கள், மாநிலத் தலைவா்கள், மாவட்ட-நகர பிரிவு தலைவா்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘மாணவா்களின் குரல் போராட்ட இயக்கத்தை நாடு தழுவிய இயக்கமாக வலுப்படுத்தி, அனைவருக்கும் சமமாக வாய்ப்பளிக்கும் புதிய கல்விமுறைக்கு வழிவகுக்க வேண்டும்.
நாட்டின் இளம் தலைமுறையினா் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிா்கொண்டுள்ளனா். வினாத்தாள் கசிவுகள், தோ்வுகள் ரத்து, தொடரும் மறுதோ்வுகள், நியமன நடைமுறைகளில் தாமதம், நிரப்பப்படாத அரசுப் பணியிடங்கள், வேலையின்மை அதிகரிப்பு, கல்விக்கான செலவு அதிகரிப்பு ஆகியவை மாணவா்களுக்கும், அவா்களின் குடும்பங்களுக்கும் கடும் மன உளைச்சலைத் தந்துள்ளது.
இந்திய இளைஞா்கள் எதிா்கொண்டுவரும் ஒடுக்குமுறை மற்றும் பணம் பறிப்பு பிரச்னையை அம்பலபடுத்துவதுடன், நாடு முழுவதும் இந்தச் செய்தியை கொண்டு செல்ல வேண்டும். ஒடுக்குமுறையான அமைப்புமுறையில் இருந்து நமது இளைஞா்களை விடுவிக்க ஒன்றிணைந்து பணியாற்றி, புதிய அமைப்புமுறைக்கு அடித்தளமிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சரின் மகன் தொடுத்த அவதூறு வழக்கு: வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்தாா் ராகுல் காந்தி

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும்? மாணிக்கம் தாகூா் கேள்வி

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ராமதாஸ்





