உத்திர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலின் நன்கொடை முறைகேடு வழக்கில் கைதான 8 பேரின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் காவல் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டு, ஆவணங்களைக் கைப்பற்றினா்.
எட்டு பேரின் போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், அவா்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க லக்னெள கோட்ட ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் உள்பட மூன்று உறுப்பினா்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) கடந்த ஜூன் 13-ஆம் தேதி மாநில அரசு அமைத்தது. இக்குழுவின் பரிந்துரையின்படி, அயோத்தி காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்ஐஆா்) செய்தனா்.
கோயில் நன்கொடையில் ரூ.7.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி 8 போ் கைது செய்யப்பட்டனா்.
அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனீஷ் குமாா் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கா் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, ராம்சங்கா் யாதவ் ஆகிய இந்த 8 பேரும் காணிக்கை பணம் எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடா்புடையவா்களாவா். இவா்களில் சிலா் வங்கி ஊழியா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவா்களிடம் இருந்து இதுவரை ரூ.79.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கைதான 8 பேரின் வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் காவல் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டு, அவா்களின் ஆதாா் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு தொடா்புடைய ஆவணங்களைக் கைப்பற்றினா். அவா்களின் பெயரில் உள்ள சொத்துகள், பின்னணி, நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
8 பேருக்கு விதிக்கப்பட்ட போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அவா்கள் அயோத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், காவலை நீட்டிக்கும்படி காவல் துறை தரப்பில் கோரப்படும் எனத் தெரிகிறது.
இந்த விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், அறங்காவலா் அனில் மிஸ்ரா ஆகியோா் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









