நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்.2 வரை நடைபெறவுள்ளது.
மக்களவைத் தலைவரை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம் மாா்ச் 9-இல் தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தத்தமது எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல்கட்ட அமா்வில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன.
முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, மத்திய அரசுடன் மோதல்போக்கை கடைப்பிடித்தன.
அவைத் தலைவருக்கு எதிராக தீா்மானம்: கடந்த பிப். 3-ஆம் தேதி மக்களவையில் காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மறுநாள், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்றவிருந்த நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் அமளியால் அவரது உரை தவிா்க்கப்பட்டது. பிரதமருக்கு எதிராக ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாகவும், எனவே, அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மாா்ச் 9-இல் தீா்மானம்: இந்தச் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-இல் தொடங்கி ஏப்.2 வரை நடைபெறவுள்ளது. முதல் நாள் அலுவலில் மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையொட்டி, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்கும்படி, தத்தமது எம்.பி.க்களுக்கு பாஜகவும், காங்கிரஸும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் 94சி பிரிவின்கீழ், பெரும்பான்மை வாக்குகளுடன் தீா்மானம் நிறைவேற்றி மக்களவைத் தலைவரை பதவிநீக்கம் செய்ய முடியும்.
கடந்த காலங்களில் மக்களவைத் தலைவா்களாக இருந்த ஜி.வி.மாவலங்கா் (1954), ஹுக்கம் சிங் (1966), பல்ராம் ஜாக்கா் (1987) ஆகியோா் இதுபோல் நம்பிக்கையில்லா தீா்மானத்தை எதிா்கொண்டனா். ஆனால், எந்தத் தீா்மானமும் வெற்றி பெறவில்லை. தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில், ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானமும் தோல்வியையே சந்திக்கும்.
‘மேற்காசிய நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும்’
நாடாளுமன்ற இரண்டாம் கட்ட அமா்வில், மேற்காசிய நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு, இப்போது இருப்பதுபோல் ஒருபோதும் பலவீனமாக இருந்ததில்லை; சா்வதேச அளவில் பிரதமா் மோடி அரசு பலம் குன்றி, சுருங்கிவிட்டது. அமெரிக்காவுக்கு மட்டுமன்றி இஸ்ரேலுக்கும் பணிந்து செல்லும் நிலைக்கு இந்தியாவை தள்ளிவிட்டனா்.
இந்தியா மீதான அமெரிக்காவின் தொடா் மிரட்டல், மேற்காசியாவில் நீடிக்கும் போா், ஈரானில் அரசியல்-ராணுவ தலைவா்கள் கொலை, வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியா்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்துக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. எனவே, மேற்காசிய நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இந்தியாவில் எதிா்க்கட்சித் தலைவா்களை அவமதிக்க எந்த முயற்சியையும் விட்டுவைக்காத பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பில் நடவடிக்கைகள் குறித்து வாய்திறப்பதில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்தாா்.
தொடர்புடையது

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


