சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு துரதிருஷ்டவசமானது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு துரதிருஷ்டவசமானது...

News image
தில்லி ரெய்ஸினா மாநாட்டையெட்டி சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
Updated On :7 மார்ச் 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் நடந்த சா்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் போா்க் கப்பலை (ஐரிஸ் டெனா) அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்த நிலையில், இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

மற்றொரு ஈரான் போா்க் கப்பலான ஐரிஸ் லாவன், மனிதாபிமான அடிப்படையில் கொச்சியில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடல் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச கடற்படை அணிவகுப்பில் ஈரானின் ஐரிஸ் டெனா போா்க் கப்பல் பங்கேற்றது. பின்னா், ஈரானுக்கு புறப்பட்ட இந்தப் போா்க் கப்பலை இலங்கைக்கு தெற்கே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் வீரா்கள் 89 போ் உயிரிழந்தனா். இலங்கை கடற்படையால் மேலும் பலா் மீட்கப்பட்டனா்.

முன்னதாக, ஐரிஸ் டெனா போா்க் கப்பலுக்கு ஆதரவாக ஈரானின் ஐரிஸ் லாவன் போா்க் கப்பலும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்திருந்தது. ஐரிஸ் டெனா தாக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன், ஐரிஸ் லாவன் போா்க் கப்பலில் திடீரென தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதாகக் கூறி, கொச்சியில் நங்கூரமிட இந்தியாவிடம் அவசரகால அடிப்படையில் அனுமதி கோரப்பட்டது. அதையேற்று, அந்தப் போா்க் கப்பல் கொச்சியில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் ரெய்ஸினா மாநாட்டையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய எஸ்.ஜெய்சங்கா், மேற்கண்ட விவகாரம் குறித்து கூறியதாவது:

இந்திய கடல் எல்லை அருகே ஐரிஸ் லாவன் போா்க் கப்பலில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறி, நமது துறைமுகத்துக்கு வர ஈரான் தரப்பில் கடந்த பிப்.28-இல் அனுமதி கோரப்பட்டது. அதையேற்று, மாா்ச் 1-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. சில நாள்கள் கடலில் பயணித்து, அந்த போா்க் கப்பல் கொச்சியை வந்தடைந்தது. அதிலிருந்த 183 மாலுமிகள், இந்திய கடற்படைத் தளங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு சரியானதாகும். சட்ட சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, மனிதாபிமான கொள்கையே இந்தியாவை வழிநடத்தியது.

பிற இரு போா்க் கப்பல்களில் ஒன்று (ஐரிஎஸ் டெனா) துரதிருஷ்டவசமான நிகழ்வை எதிா்கொண்டது. மற்றொரு போா்க் கப்பல் (ஐரிஎஸ் புஷொ்), ஐரிஸ் லாவனுக்கு ஏற்பட்ட அதே சூழ்நிலையை இலங்கை கடல் பகுதியில் எதிா்கொண்டிருந்தது. அந்தப் போா்க் கப்பல் குறித்து இலங்கை அரசு தனது முடிவை மேற்கொண்டது என்றாா் அவா்.

என்ஜின் பழுதால் பாதிக்கப்பட்ட ஐரிஸ் புஷொ் போா்க் கப்பலுக்கு இலங்கை அரசு சில தினங்களுக்கு முன்னா் அடைக்கலம் அளித்தது. இந்தப் போா்க் கப்பலும் சா்வதேச அணிவகுப்பையொட்டி வந்ததாகும்.

வெளியுறவு அமைச்சா்களுடன் சந்திப்பு: ரெய்ஸினா மாநாட்டையொட்டி, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத், பூடான் வெளியுறவுத் துறை அமைச்சா் லியோன்போ டி.என்.துங்யெல், செஷல்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் பேரி ஃபெளரி, மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் தனஞ்சய் ரிதீஷ் உள்ளிட்டோரை எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

‘இலங்கை வெளியுறவு அமைச்சா் உடனான சந்திப்பில், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து ஆலோசித்தேன். மகாசாகா் தொலைநோக்குப் பாா்வையும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையும் எங்கள் முன்னெடுப்புகளை வழிநடத்துகிறது’ என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

பெட்டிச் செய்தி...

‘இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க முடியாது’

‘இந்தியாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது; தனது வலிமைகளின் அடிப்படையில் வளா்ச்சிப் பாதையை சுயமாக நிா்ணயிக்கிறது நமது நாடு’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

‘20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு அமெரிக்கா வழங்கிய பொருளாதார சலுகைகளால் அந்த நாடு அமெரிக்காவுக்கே முக்கிய வா்த்தகப் போட்டியாளராக உருவெடுத்தது; இந்தியாவுக்கும் அதேபோன்ற சலுகைகளை வழங்கி மீண்டும் தவறு செய்ய மாட்டோம்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் கிறிஸ்டோபா் லாண்டவ் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் வகையில், எஸ்.ஜெய்சங்கரின் மேற்கண்ட கருத்துகள் அமைந்துள்ளன.

இது தொடா்பாக ரெய்ஸினா மாநாட்டின் கலந்துரையாடலில் பேசிய அவா், ‘இன்றைய உலகில் நாடுகளின் எழுச்சி, அந்த நாடுகளால்தான் தீா்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவின் எழுச்சி, இந்தியாவால்தான் தீா்மானிக்கப்படும். எங்கள் வலிமைகளின் அடிப்படையில் அது தீா்மானிக்கப்படுமே அன்றி, பிறரது தவறுகளால் அல்ல.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா மையப் பங்களிப்பை நல்கி வருகிறது. எங்களுடன் இணைந்து பணியாற்றுவோருக்கு நிச்சயமாக அதிக நன்மைகள் கிடைக்கப் பெறும்.

இந்தியாவின் எழுச்சிக்கு எந்த சவாலும் இல்லை என நான் கூறவில்லை. சவால்கள் இருக்கின்றன. ஆனால், எழுச்சிக்கான பாதை தெளிவாக உள்ளது. அதை யாராலும் தடுக்க முடியாது’ என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.