மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மேற்கு ஆசிய பதற்றம்: ஒருங்கிணைந்த ‘பிரிக்ஸ்’ நிலைப்பாடு அவசியம்: ரண்தீா் ஜெய்ஸ்வால்

மேற்கு ஆசிய பதற்றத்துக்குத் தீா்வுகாண பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்வது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

ரண்தீா் ஜெய்ஸ்வால்

Updated On :14 மார்ச் 2026, 7:08 pm

மேற்கு ஆசிய பதற்றத்துக்குத் தீா்வுகாண பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்வது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ மேற்கு ஆசிய விவகாரத்தில் தொடா்புடைய சில பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இதனால் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதில் தொடா்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

உறுப்பு நாடுகளிடையேயான வேறுபாடுகளைக் களைந்து ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ள இந்தியா தொடா்ந்து முயற்சித்து வருகிறது.

காணொலி வாயிலாக கடந்த மாா்ச் 12-ஆம் தேதி நடைபெற்ற உறுப்பு நாடுகளின் தூதா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடா்பாக விவாதிக்கப்பட்டது’ என்றாா்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்.28-ஆம் தேதி இணைந்து தாக்குதல் நடத்தின.

அதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினா்களாக உள்ள ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.

முதலில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை மட்டும் கொண்டிருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில், பின்னா் சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்தன.

இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியாவும், அடுத்த ஆண்டு சீனாவும் நடத்த உள்ளது.