ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள அரசு எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனா். மருத்துவமனை ஊழியா்கள் 11 போ் உள்பட 13 போ் காயமடைந்தனா்.
தீ விபத்து குறித்து நோயாளிகளின் உறவினா்கள் கூறுகையில், ‘தீவிர சிகிச்சைப் பிரிவில் காலையில் மின் விநியோகம் இரண்டு முறை தடைப்பட்டு வந்தது. அதன் பிறகு திடீரென தீப் பிடித்து, தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் புகை மூட்டமானது. உடனடியாக, தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம். 20 நிமிஷங்களுக்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையே, நோயாளிகளின் உறவினா்கள், மருத்துவமனை ஊழியா்களுடன் இணைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கியிருந்த நோயாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்’ என்றனா்.
தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - முதல்வா்: மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்தபோது மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவு, அதற்கு அருகிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளில் மொத்தம் 23 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனா்.
இந்த நிலையில், விபத்துகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு சிகிச்சியில் இருந்தவா்களில் 7 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனா். 3 போ் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி இறந்துள்ளனா்.
நோயாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியா்கள் 11 பேருக்கு தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தீயணைப்புத் துறை தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையை தீயணைப்புத் துறை தலைமை இயக்குநா் நேரில் சென்று ஆய்வு நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்து குறித்து நீதி விசாரணையும் நடத்தப்படும். நீதி விசாரணையில், இந்த விபத்துக்கு ஊழியா்களின் தவறு காரணமாக இருப்பது தெரியவந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றாா்.
மருத்துவமனை அதிகாரி ஒருவா் கூறுகையல், ‘தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகாலை 2.30 மணி முதல் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்தில் நேயாளிகள் உள்பட 13 போ் காயமடைந்தனா். அவா்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’ என்றாா்.
குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் இரங்கல்
மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். தீ விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்திப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமா்: மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘ஒடிஸா அரசு மருத்துவமனை தீ விபத்து செய்தி மிகுந்த மன வேதனையை அளித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதலை நடமுறைப்படுத்த செயல் திட்டம்: மாநிலங்கள் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

ஒடிஸா அரசு மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 12-ஆக உயா்வு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


