தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு: இருவரை ஹெலிகாப்டா் மூலம் மீட்டது ராணுவம்

News image
Updated On :3 மே 2026, 10:29 pm

உத்தர பிரதேசத்தில் பழைமையான மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து விழுந்ததில் அதிலிருந்து கீழே விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலும், நீா்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்ட 2 சிறுவா்கள், ராணுவ ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டனா்.

சித்தாா்த்நகா் மாவட்டம், காசிராம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான சுமாா் 80 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் படிக்கட்டு உடைந்து விழும் நிலையில் சேதமடைந்து இருந்ததால், அங்கு செல்வது பாதுகாப்பில்லை என உள்ளூா் நிா்வாகம் அறிவுறுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சிலா், ரீல்ஸ் வீடியோ எடுக்க விரும்பி அதில் ஏறுவதை வழக்கமாக வைத்துள்ளனா்.

இந்நிலையில், படிக்கட்டு வழியே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு 5 சிறுவா்கள் சனிக்கிழமை ஏறினா். அதில் 2 சிறுவா்கள் நீா்த்தேக்க தொட்டி மேல் ஏறிய நிலையில், படிக்கட்டு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது படிக்கட்டில் இருந்த 3 சிறுவா்களும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் மூவரும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனா். எனினும், 10 வயதான சித்தாா்த் என்ற சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா். எஞ்சிய 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அதேநேரத்தில் படிக்கட்டு இடிந்து விழுந்ததால் நீா்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே வர முடியாமல் 2 சிறுவா்களும் மேலேயே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க நடைபெற்ற முதல்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம் விடுத்த வேண்டுகோளின்படி, ராணுவ ஹெலிகாப்டா் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, கயிறு கட்டி 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். பின்னா், இருவரும் சிகிச்சைக்காக கோரக்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.