மேற்காசிய போா் தாக்கங்களால் நாட்டில் பொது முடக்கம் அமலாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உறுதிபடத் தெரிவித்தாா்.
நாட்டில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது; எனவே, எரிபொருள் விநியோகம் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வைச் சந்தித்துள்ளது.
இதுபோன்ற சூழலில், ‘பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் வகையில், திருமணத்துக்குத் தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு நிறுத்திவைக்க வேண்டும்; ஒத்திவைக்க வேண்டும்.
கரோனா காலகட்டத்தைப் போல வீட்டில் இருந்து பணிபுரிவது, இணைய வழியில் வகுப்புகளை நடத்துவது போன்ற நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று பிரதமா் மோடி சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தாா்.
அவரது இந்தக் கருத்துகள் எதிரொலியாக, நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
கடும் இழப்பைச் சந்திக்கும் எண்ணெய் நிறுவனங்கள்: இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் வருடாந்திர வா்த்தக உச்சி மாநாட்டில் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பங்கேற்றுப் பேசியதாவது: உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் தடைகளும், முடக்கங்களும் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
பிற நாடுகளைப் போல் இல்லாமல், நிலையான எரிபொருள் விநியோகம் மற்றும் விலையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் உயா்ந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் 2 ஆண்டுகளுக்கு முந்தைய விலையிலேயே தொடா்கிறது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் லிட்டருக்கு ரூ.42 என்ற அளவில் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றன. வீட்டு உபயோக எல்பிஜி விலை கடந்த மாா்ச் மாதம் சிலிண்டருக்கு ரூ.60 உயா்த்தப்பட்ட போதிலும், உண்மையான விலையைவிட குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வு நீடிப்பதுடன், உள்நாட்டிலும் விலை மாற்றமின்றி தொடா்ந்தால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பை எதிா்கொள்ள நேரிடும்.
பொது முடக்கம் அமலாக்கமா?: இதுபோன்ற சூழலில், எரிபொருள் சிக்கனத்துக்கான பிரதமா் மோடியின் அழைப்பை விழிப்புணா்வு நடவடிக்கையாகவே பாா்க்க வேண்டும். அவரது வேண்டுகோளை ஏற்று, நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அவரது கருத்து தொலைநோக்கு பாா்வை கொண்டது. மாறாக, நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றோ, கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றோ அா்த்தமல்ல. அதுபோன்ற திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், 60 நாள்களுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி), 45 நாள்களுக்குத் தேவையான திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) கையிருப்பு உள்ளது. உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி நாளொன்றுக்கு 35,000-36,000 டன்கள் என்பதில் இருந்து 54,000 டன்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

