உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

இரு நாள்கள் அரசுப் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணி: முதல்வா் ரேகா குப்தா

எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக வாரத்தில் இரு நாள்கள் வீட்டிலிருந்து அரசுப் பணி, திங்கள்கிழமைகளில் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோவில் பயணம்

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக வாரத்தில் இரு நாள்கள் வீட்டிலிருந்து அரசுப் பணி, திங்கள்கிழமைகளில் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோவில் பயணம் என பல்வேறு நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை அறிவித்தாா்.

மேற்காசியாவில் நடைபெற்று வரும் போா்ச்சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கும்போது இந்தியாவின் அந்நிய செலாவணி குறையும் நிலையில், எரிபொருள்களை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

இந்நிலையில், எரிபொருள் மற்றும் பிற வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து முதல்வா் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது: எரிபொருளைச் சேமித்து செலவுகளைக் குறைக்க பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளின்படி என்னுடைய பாரதம் என்னுடைய பங்களிப்பு என்ற விரிவான திட்டத்தை தில்லி அரசு தீட்டியுள்ளது. இதன்படி, தில்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகப் பணியாளா்கள் வாரத்தில் இரு நாள்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவா். இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு தனியாா் நிறுவனங்களுக்கு கோரிக்கைவிடுக்கப்படும்.

திங்கள்கிழமைகளில் நான் உள்பட அனைத்து அமைச்சா்கள், அதிகாரிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வா். வாரத்தில் வாகனம் பயன்படுத்தாத நாளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

ஓராண்டு காலத்துக்கு அமைச்சா்களின் அனைத்து வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ய தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு எவ்வித பெரிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படாது.

தில்லி அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தில்லி அமைச்சா்கள் பொதுப்போக்குவரத்துகளில் பயணிப்பாா்கள் என முதல்வா் ரேகா குப்தா கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அதன் பின்னா், அமைச்சா்கள் ஆஷிஷ் சூட், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமாா் உள்ளிட்டோா் தில்லி மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணித்தனா்.

முதல்வா் ரேகா குப்தா தனது காருக்கு முன்பு மற்றும் பின்னால் செல்லக்கூடிய வாகனங்களை எண்ணிக்கையை 60 சதவீதம் குறைத்துள்ளாா். முதல்வரின் கான்வாயில் இரு மின்வாகனங்கள் உள்பட 4 வாகனங்கள் மட்டும் தற்போது செல்கின்றன.