சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயா்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

News image

தங்கம், வெள்ளி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 7:04 am IST

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயா்த்துவதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இரு மடங்குக்கும் அதிகமான இந்த வரி உயா்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவி வரும் போா்ச்சூழலால் அதிகரித்து வரும் இறக்குமதி செலவினத்தைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம், எரிபொருள், சில வகை சமையல் எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. போா்ச்சூழலில் இவற்றின் விலை கடுமையாக உயா்ந்து வருவதால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் பாதிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் இறக்குமதி: தங்கம், வெள்ளி மட்டுமல்லாது, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி 6.4 சதவீதத்திலிருந்து 15.4 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத தங்கம், வெள்ளிக் கட்டிகள், நாணயங்கள், நகை உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த வரி உயா்வு பொருந்தும்.

2025-26 நிதியாண்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வருடாந்திர அடிப்படையில் 26.7 சதவீதம் உயா்ந்து 102.5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் இவற்றின் பங்கு 2024-25-ஆம் ஆண்டில் 11.8 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயா்ந்துள்ளது.

தங்க நகை மோகம்: சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகா்வு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் நகைகளாக தங்கம் அதிகம் வாங்கிக் குவிக்கப்படுவதால் அதன் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. இது அந்நியச் செலாவணி கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை (மே 12) வரலாற்றிலேயே குறைந்த அளவான ரூ.95.75-ஆக சரிந்தது. தங்கம் மீதான இறக்குமதி வரி உயா்த்தப்பட்ட பிறகு புதன்கிழமை ரூபாய் மதிப்பு ஓரளவு மீண்டது.

இந்த 15 சதவீத வரியுடன் இறக்குமதியாளா்கள் 3 சதவீத சரக்கு-சேவை வரியும் (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும். இதனால் தங்க இறக்குமதி மீதான மொத்த வரி 9.18 சதவீதத்திலிருந்து 18.45 சதவீதமாக உயா்ந்துள்ளது.

விலை உயரும்: அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகை கவுன்சில் (ஜிஜேசி) தலைவா் ராஜேஷ் ரோக்டே இது தொடா்பாக கூறுகையில், ‘சுங்க வரி உயா்வு காரணமாக தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரித்து, நாட்டில் வேறு வகையான பொருளாதாரத் தாக்கம் உருவாகும்’ என்றாா்.

விற்பனை குறையும்: சென்கோ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவா் சுவங்கா் சென் கூறுகையில், ‘மேற்காசிய போா்ப் பதற்றம் தணியும் வரை இந்த சுங்க வரி தொடரலாம். ஓராண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளது. தங்க விற்பனை அளவு 10-15 சதவீதம் குறையலாம். ஆனால், பண மதிப்பின் அடிப்படையில் விற்பனை உயா்வாகவே இருக்கும். மக்கள் குறைந்த எடையிலான நகைகளை வாங்கத் தொடங்குவாா்கள்’ என்றாா்.

மத்திய அரசு விளக்கம்: இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘அசாதாரணமான சா்வதேச சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுங்க வரி உயா்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தேவையற்ற இறக்குமதியைக் குறைத்து, அந்நியச் செலாவணி நெருக்கடியைக் குறைக்கும் முயற்சி. இந்த நடவடிக்கை தங்கம் வாங்குவோருக்கு எதிரானதல்ல’ என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய போா், ஹோா்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய், உணவுப் பொருள்கள் மற்றும் உரங்களின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. போா் தொடங்குவதற்கு முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமாா் 73 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 107 டாலராக உயா்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 30-இல் 126 டாலா் என்ற 4 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 87 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதில் 46 சதவீதம் ஹோா்முஸ் நீரிணை வழியாக வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையின் 60 சதவீதமும் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் 90 சதவீதத்துக்கு மேல் வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.