ஹைதராபாத் : மத்திய இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமாரின் மகன் பந்தி பாகீரத் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை(மே 16) விசாரணைக்கு ஆஜரானார்.
பந்தி பாகீரத் 17 வயது சிறுமியொருவருடன் நெருக்கமாகப் பழகி வந்ததுடன் அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகக் கொடுமை இழைத்ததாக சிறுமியின் அம்மா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் புகார் மீது பதியப்படும் போக்சோ வழக்கு பாகீரத் மீது கடந்த மே 8-ஆம் தேதி பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் முன் ஜாமீன் கோரி தொடர்ந்த மனு தெலங்கானா உயர்நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை(மே 15) தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அந்தச் சிறுமியும் அவர்தம் குடும்பத்தினரும் தம் மீது நெருக்கம் காட்டியதாகவும், இந்நிலையில் தமது மகளை தான் கட்டாயம் திருமணம் செய்தாக வேண்டுமெனவும் இல்லையேல் தன் மீது வழக்கு தொடருவோம் என்று அவர்கள் தரப்பு தொடர்ந்து மிரட்டியதாகவும் பாகீரத் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டுள்ளது.
பெண் வீட்டார் பாகீரத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ரூ. 5 கோடி தரவில்லை என்றால் சிறுமியின் தாயார் தற்கொலை செய்யப்போவதாக பயமுறுத்தினார் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து, அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் தெரிவித்திருப்பதாவது : “எமது மகன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சட்டத்தை மதித்து, நான் பாகீரத்தை வழக்குரைஞர்கள் வழியாக காவல் விசாரணைக்கு ஒப்படைத்துள்ளேன்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். அது, எமது மகனாயினும் சரி அல்லது சாமானிய குடிமகனானாலும் சரி. ஒவ்வொருவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.
நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு திங்கள்கிழமை வரும் என்று எதிர்பார்த்தாலும், நீதி அமைப்பின் மீதான மதிப்பைக் கருதி இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதால் எமது மகனை நான் விசாரணைக்காக அனுப்பியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜரான பந்தி பாகீரத் இன்று(மே 16) கைது செய்யப்பட்டதாக தெலங்கானா காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
POCSO case: Bandi Sanjay asks son to appear before police, urges cooperation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








