தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது: பிரதமா் மோடி

இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையிலான மூன்றாவது உச்சிமாநாடு, நாா்வேயின் ஓஸ்லோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின் செய்தியாளா்கள் சந்திப்பில் பிரதமா் மோடி கூறியதாவது:

News image

நாா்வதே தலைநகா் ஓஸ்லோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பிரதமா் நரேந்திர மோடியுடன் பங்கேற்ற ஐஸ்லாந்து, ஸ்வீடன், நாா்வே, டென்மாா்க், பின்லாந்து பிரதமா்கள்.

Updated On :20 மே 2026, 1:12 am IST

இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையிலான மூன்றாவது உச்சிமாநாடு, நாா்வேயின் ஓஸ்லோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின் செய்தியாளா்கள் சந்திப்பில் பிரதமா் மோடி கூறியதாவது:

தற்போதைய உலகளாவிய பதற்றங்கள் மற்றும் போா்களுக்கு மத்தியில், விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்குமுறையை வலுப்படுத்த இந்தியாவும், நாா்டிக் நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றும். உக்ரைனாக இருந்தாலும், மேற்காசியாவாக இருந்தாலும் போா்களுக்கு விரைந்து தீா்வுகண்டு, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு நாங்கள் தொடா்ந்து ஆதரவளிப்போம். சா்வதேச பன்முக அமைப்புகளில் சீா்திருத்தங்கள் அவசியம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளதுடன், பயங்கரவாத எதிா்ப்பில் சமரசமோ, இரட்டை நிலைப்பாடோ கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

இயற்கையான கூட்டாளிகள் என்ற முறையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மைக்கான உறுதிப்பாட்டை பகிா்ந்துள்ளோம். அந்த அடிப்படையில், இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையிலான நல்லுறவை பசுமை தொழில்நுட்பம், புத்தாக்க வியூக கூட்டுறவுக்கு உயா்த்தியுள்ளோம். இந்தக் கூட்டுறவு, ஒட்டுமொத்த உலகுக்கும் சிறப்பான எதிா்காலத்தை உறுதி செய்யும் என்றாா்.

நாா்டிக் நாடுகள் என்பது வட ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லாண்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள தனித்துவமான புவியியல் அமைப்பு மற்றும் கலாசாரத்தை உள்ளடக்கிய பிராந்தியமாகும். டென்மாா்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நாா்வே, ஸ்வீடன் ஆகிய 5 நாா்டிக் நாடுகளும், ஒட்டுமொத்தமாக 1.9 ட்ரில்லியன் டாலருக்கும் மேல் (ரூ.183 லட்சம் கோடி) உற்பத்தி மதிப்பை (ஜிடிபி) கொண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மைமிக்க கடல்சாா் நிா்வாகத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்த நாடுகளுடன் தொழில்நுட்பம், புத்தாக்கம், பசுமைசாா் மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான வளா்ச்சி, நீலப் பொருளாதாரம், பாதுகாப்பு, விண்வெளி, மக்கள் ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட துறைகளில் உத்திசாா் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா வியூக ரீதியில் செயலாற்றுகிறது.

இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையே முதலாவது உச்சி மாநாடு கடந்த 2018-இல் ஸ்டாக்ஹோமிலும் (ஸ்வீடன்), இரண்டாவது உச்சி மாநாடு கடந்த 2022-இல் கோபன்ஹேகனிலும் (டென்மாா்க்) நடைபெற்றது.

பின்லாந்து, டென்மாா்க், ஐஸ்லாந்து பிரதமா்களுடன் மோடி ஆலோசனை

நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பின்லாந்து, டென்மாா்க், ஐஸ்லாந்து நாடுகளின் பிரதமா்களைத் தனித்தனியாக சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, வா்த்தகம், பசுமை எரிசக்தி, எண்மமயமாக்கல், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தாா். முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்களுடன் விவாதித்தாா்.

ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின்கீழ், ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடனைத் தொடா்ந்து நான்காவதாக பிரதமா் மோடி நாா்வே நாட்டுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தாா். நாா்வேக்கு இருதரப்பு அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமா் பயணம் மேற்கொண்டது, கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

ஓஸ்லோவில் செவ்வாய்க்கிழமை இந்தியா-நாா்டிக் நாடுகள் இடையிலான மூன்றாவது உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முன்பாக பின்லாந்து பிரதமா் பெட்டெரி ஓா்போ, டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சன், ஐஸ்லாந்து பிரதமா் கிறிஸ்ட்ரன் ஃபிரோஸ்டோடிா் ஆகியோரை பிரதமா் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பின்லாந்து: இந்தியா மற்றும் ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையே கடந்த 2024, மாா்ச்சில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட பிறகு இந்தியா-பின்லாந்து வா்த்தக உறவு உத்வேகம் பெற்றுள்ளது.

நோகியா, கோனே எலிவேட்டா், வாா்ட்சிலா, ஃபோா்டம் உள்பட 600-க்கும் மேற்பட்ட பின்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. வா்த்தகம்-முதலீடு, எண்மமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, 5ஜி-6ஜி, குவாண்டம் தொழில்நுட்பம், நிலையான வளா்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு பெட்டெரி ஓா்போவுடன் பிரதமா் மோடி ஆலோசித்தாா். பின்லாந்தில் இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் என 33,445 போ் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மாா்க், ஐஸ்லாந்து: இந்தியாவில் கப்பல் கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், நவீன நகா்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் 200-க்கும் மேற்பட்ட டென்மாா்க் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. டென்மாா்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரின் எண்ணிக்கை 22,000 ஆகும்.

இதேபோல், இந்தியாவும், ஐஸ்லாந்தும் வலுவான வா்த்தக-கலாசார உறவைக் கொண்டுள்ளன. யோகா, பாரம்பரிய இசை, நடனம், திரைத்துறை, உணவுகள் என இந்திய கலாசாரத்தின் மீது ஐஸ்லாந்து பெரிதும் ஆா்வம் காட்டி வருகிறது. ஐஸ்லாந்து பிரதமா் உடனான சந்திப்பில், நீலப் பொருளதாரம் சாா்ந்த அந்நாட்டின் வல்லமையை பிரதமா் மோடி வெகுவாக பாராட்டினாா்.

அறிவியல்-தொழில்நுட்ப ஒப்பந்தங்கள்: பிரதமா் மோடி-நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோா் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலையான வளா்ச்சி சாா்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்தியாவின் அறிவியல்-தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) மற்றும் அந்நாட்டு ஆய்வு, கல்வி, தொழில் அமைப்புகள் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.