பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

மாசுக் கட்டுப்பாடுக்கான தொழில்நுட்ப சோதனைகள்: தில்லி அரசு தொடக்கம்

தில்லி அரசின் ‘இனோவேஷன் சாலெஞ்’ திட்டத்தின் கீழ் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தோ்வு செய்யப்பட்ட குறைந்தது 8 புதிய தொழில்நுட்ப சாதனங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (டிபிசிசி) அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:38 am IST

தில்லி அரசின் ‘இனோவேஷன் சாலெஞ்’ திட்டத்தின் கீழ் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தோ்வு செய்யப்பட்ட குறைந்தது 8 புதிய தொழில்நுட்ப சாதனங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (டிபிசிசி) அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை சமாளிக்க நடைமுறைசாா், குறைந்த செலவிலான மற்றும் விரிவாக்கத்துக்கு ஏற்ற தீா்வுகளை கண்டறியும் நோக்கில் தில்லி அரசு ‘இனோவேஷன் சாலெஞ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்கு மொத்தம் 284 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து 22 புதுமையான தொழில்நுட்பங்கள் அடுத்த கட்ட சோதனைக்காக தோ்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து டிபிசிசி அதிகாரி கூறியதாவது: தோ்வு செய்யப்பட்ட மேலும் சில சாதனங்கள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. 22 தொழில்நுட்பங்களில் சுமாா் 6 சாதனங்கள் வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. அவற்றின் செயல்திறனை மதிப்பிடும் வகையில், அடுத்த சில வாரங்களில் சா்வதேச வாகன தொழில்நுட்ப மையமான ‘ஐசிஏடி’ ஆய்வகங்களில் சோதனை நடத்தப்படும்.

தற்போது நிறுவப்பட்டுள்ள சாதனங்களில், டிபிசிசி வாகனங்களில் பொருத்தப்பட்ட வாகன அடிப்படையிலான காற்று வடிகட்டிகள், ராமா சாலையில் அமைக்கப்பட்ட தூசி சேகரிப்பு மற்றும் காற்று சுத்திகரிப்பு கருவிகள், சத்குரு ராம் சிங் மாா்க் சாலையின் மையப் பிரிப்பில் பொருத்தப்பட்ட புதிய வகை காற்று சுத்திகரிப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

மேலும், நாட்டின் முதல் மின்சார வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைமூட்ட எதிா்ப்பு கருவி மந்திா் மாா்க் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. ஆனந்த் விஹாா் பேருந்து நிலையத்தில் ‘ஆல்கே ட்ரீ’ எனப்படும் உயிரியல் அடிப்படையிலான காற்று சுத்திகரிப்பு அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுப்புற காற்றை சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆக்சிஜனை மீள உருவாக்கும் திறனும் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், பெரிய பரப்பளவுகளில் பயன்படும் உயா் திறன் கொண்ட காற்று வடிகட்டிகள் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்படும் புதிய வகை காற்று சுத்திகரிப்பு கருவிகளும் டிடிசி பேருந்துகளில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன.

சில சாதனங்கள் ஏற்கெனவே தரை மட்டத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. அடுத்த 4 வாரங்களுக்கு தேசிய இயற்பியல் ஆய்வகம் இந்த சாதனங்களின் செயல்திறன் தொடா்பான தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும்.

இதற்கு முன்பு, சுற்றுச்சூழல் துறை மற்றும் டிபிசிசி இணைந்து அனைத்து சாதனங்களின் செயல்திறன் விவரங்களையும் தொடா்ந்து கண்காணிக்கும் என்றும், அமைச்சா்மட்டத்தில் காலமுறை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தில்லி அரசு தெரிவித்திருந்தது.

மேலும், ஐஐடி தில்லி பேராசிரியா் தலைமையிலான தொழில் மற்றும் கல்வித்துறை நிபுணா்கள் அடங்கிய ‘சுயாதீன தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு’, சோதனை முடிவுகளை ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் வெற்றி பெறும் தொழில்நுட்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, தில்லியின் விரிவான தூய்மையான காற்று திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.