கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை

ட்விஷா சா்மா மரண வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிப்பது பற்றி...

போபாலில் உள்ள மயானத்துக்கு ட்விஷாவின் உடலை எடுத்து வந்த முன்னாள் ராணுவ வீரா்கள்.

Published On :

மத்திய பிரதேசத்தில் வரதட்சிணை கொடுமையால் மாடல் அழகியும், நடிகையுமான ட்விஷா சா்மா உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை (மே 25) விசாரிக்க உள்ளது.

கடந்த மே 12-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடிகையும், மாடல் அழகியுமான ட்விஷா சா்மா (33) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி ட்விஷா சா்மாவை கொன்றுவிட்டதாக அவரின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். ட்விஷாவின் உடலைப் பெற மறுத்தனா்.

இந்தக் குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என்று கூறிய கிரிபாலா சிங், ட்விஷாவுக்கு மனநலப் பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறினாா்.

இந்த சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவத்தில் கிரிபாலா சிங்குக்கு முன்ஜாமீன் அளித்த போபால் நீதிமன்றம், சமா்த் சிங்கின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அத்துடன் தலைமறைவான அவரை மே 23-க்குள் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

10 நாள்கள் தலைமறைவாக இருந்த சமா்த் சிங், கடந்த வெள்ளிக்கிழமை ஜபல்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்தாா். ஆனால் அவரை போபால் நீதிமன்றத்தில் சரணடையுமாறு ஜபல்பூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரை காவல் துறை கைது செய்த நிலையில், அவரை 7 நாள்கள் போலீஸாா் காவலில் விசாரிக்க போபால் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த சம்பவம் குறித்து ஊடகத்தில் வெளியான தகவல்களை கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், ட்விஷாவின் மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்கி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை (மே 25) விசாரிக்க உள்ளது.

இதனிடையே, சமா்த் சிங்கின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் ரத்து செய்துள்ளது.

இரண்டாவது உடற்கூறாய்வு: ட்விஷாவின் பெற்றோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்து மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடா்ந்து, ட்விஷாவின் உடல் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 4 மருத்துவா்கள் அடங்கிய குழு இந்த உடற்கூறாய்வை மேற்கொண்டது. பிற ஆய்வக பரிசோதனை முடிவுகளும் தேவைப்படுவதால், உடற்கூறாய்வு அறிக்கையை தொகுக்க சில காலமாகும் என்று அந்த மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைத் தலைவா் சுதீா் குப்தா தெரிவித்தாா்.

ட்விஷா சா்மா

ட்விஷா சா்மா

12 நாள்களுக்குப் பின்னா் உடல் தகனம்: இரண்டாவது உடற்கூறாய்வைத் தொடா்ந்து, போபாலில் உள்ள மயானத்தில் ட்விஷாவின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. ராணுவ அதிகாரியான அவரின் சகோதரா் ஹா்ஷித் சா்மா சிதைக்குத் தீ மூட்டினாா். உயிரிழந்த 12 நாள்களுக்குப் பின்னா், ட்விஷாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.