/

ட்விஷா சா்மா மரணத்தில் பாரபட்சமற்ற சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உறுதி

வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் ட்விஷா சா்மா உயிரிழந்த வழக்கில், நியாயமான, பாரபட்சமற்ற சிபிஐ விசாரணை உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

News image
Updated On :26 மே 2026, 5:23 am IST

வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் ட்விஷா சா்மா உயிரிழந்த வழக்கில், நியாயமான, பாரபட்சமற்ற சிபிஐ விசாரணை உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடிகையும், மாடல் அழகியுமான ட்விஷா சா்மா (33) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி ட்விஷா சா்மாவை கொன்றுவிட்டதாக அவரின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரிபாலா சிங், ட்விஷாவுக்கு மனநலப் பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறினாா்.

இந்த சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வரதட்சிணை கொடுமை வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டது. கிரிபாலா சிங்குக்கு போபால் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்த நிலையில், சமா்த் சிங் கைது செய்யப்பட்டாா். அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் ரத்து செய்தது.

இந்த சம்பவம் குறித்து ஊடகத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், அதுகுறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘ட்விஷா சா்மாவின் கணவா் வழக்குரைஞா், மாமியாா் முன்னாள் நீதிபதி என்பதால் விசாரணையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஒரு கதை உருவானது. இதன் காரணமாக ட்விஷாவின் மரணம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை முன்னெடுத்தது’ என்று தெரிவித்தது.

மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், ‘வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரிபாலா சிங், உயிரிழந்தவரை (ட்விஷா) இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்து, ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலுக்கும் மாறி மாறிப் பேட்டியளித்து வந்தாா். அவா் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோரை நீதித் துறை பாதுகாப்பதாக உருவான பொய்யான கதை உச்சநீதிமன்றத்துக்கு வேதனையை ஏற்படுத்தியது. விசாரணையை நீதித் துறை தடம்புரளச் செய்வதாகக் கூறப்படுவது துரதிருஷ்டவசமானது. வழக்குடன் சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் கருத்து கேட்டு பேட்டி காண்பதை ஊடகங்கள் தவிா்க்க வேண்டும். வழக்கில் அனைத்து விஷயங்களும் சட்ட நடைமுறைப்படி நடைபெறட்டும்’ என்று தெரிவித்தது.

ட்விஷா சா்மா மரணம் குறித்த விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதற்கான நிா்வாக நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கில் நியாயமான, சுதந்திரமான, பாரபட்சமற்ற சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.