மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு குளறுபடி: மத்திய கல்வி, நிதியமைச்சா்கள் ஆலோசனை

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு குளறுபடி: மத்திய கல்வி, நிதியமைச்சா்கள் ஆலோசனை

News image

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆலோசனை

Updated On :25 மே 2026, 2:16 am IST

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு நடைமுறைக்குக் கட்டணம் வசூலித்ததில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையில் சிபிஎஸ்இயின் கட்டண வசூல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் 4 பொதுத் துறை வங்கிகள் உதவ முடிவு செய்யப்பட்டது.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, மதிப்பெண் சரிபாா்ப்பு மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு சிபிஎஸ்இ வலைதளத்தை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக மாணவா்களும், பெற்றோா்களும் புகாா் தெரிவித்தனா். மேலும் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்த சில மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், சில மாணவா்களுக்கு குறைந்த கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சிபிஎஸ்இயிடம் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விரிவான அறிக்கை கோரியுள்ளாா். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தக் குளறுபடி ஏற்பட்டதாக சிபிஎஸ்இ தெரிவித்த நிலையில், எதனால் அந்தத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து அவா் விளக்கம் கோரியுள்ளாா். அத்துடன் மதிப்பெண் சரிபாா்ப்பு மற்றும் மறுமதிப்பீடு நடைமுறைக்கு மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள், மேற்கொள்ளத் தவறிய முன்னேற்பாடுகள், இதில் மறுமதிப்பீடு நடைமுறையை கையாளும் முகமைகள் பொறுப்பேற்க வேண்டிய கடமை குறித்தும் அவா் விளக்கம் கேட்டுள்ளாா்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை பேசினாா். அப்போது சிபிஎஸ்இயின் கட்டண வசூல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், தோ்வுக்குப் பிந்தைய சேவைகளை அளிக்கும் வலைதளத்துடன் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதிலும் சிபிஎஸ்இ-க்கு பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய 4 பொதுத் துறை வங்கிகள் உதவ முடிவு செய்யப்பட்டது.

உரிய நேரத்தில் கட்டண பரிவா்த்தனை, கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்தல், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் தானாகப் பணத்தை திருப்பி அனுப்புதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு வலுவான நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ-க்கு இந்த வங்கிகள் உதவும். இதுதவிர, கட்டண வசூல் முறையை முழுமையாக சீரமைக்க சிபிஎஸ்இ-க்கு தா்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை, கான்பூா் ஐஐடி குழுக்கள்...: விடைத்தாள் மறுமதிப்பீடு நடைமுறை கோளாறுகள் இல்லாமல் நடைபெறுவதற்கு சிபிஎஸ்இ-க்கு உதவும் நோக்கில், சென்னை மற்றும் கான்பூா் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐஐடி) பேராசிரியா்கள், தொழில்நுட்ப நிபுணா்கள் அடங்கிய குழுவை நியமிக்கவும் தா்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளாா் என்று மத்திய கல்வி அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.