ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தீர்ப்பு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு பற்றி...

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 12:39 pm IST

விசாரணை முடிந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு அனைத்து நீதிபதிகளும் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2025, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இதுவரை இணையதளத்திலோ, மனுதாரரின் வழக்கறிஞரிடமோ வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் இத்தகைய தாமத நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், உயர்நீதிமன்ற நீதிபதியாக தான் பணியாற்றிய 15 ஆண்டுகளில், ஒரு தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டு, மூன்று மாதங்களுக்குள் அதை அறிவிக்காமல் இருந்ததே இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்ததாவது:

1. ஒரு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால், அந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும். தனிநபர் சுதந்திரம் தொடர்பான வழக்குகளில், இன்னும் விரைவாக தீர்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2. ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவுகள், இயன்றவரை அன்றைய நாளே வழங்கப்பட வேண்டும். ஒருவேளை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால், அதிகபட்சம் மறுநாளுக்குள் வழங்கப்பட வேண்டும்.

3. ஜாமீன் உத்தரவுகள் வழங்கப்பட்டால், அதே நாளில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

4. விசாரணை கைதிகள், ஜாமீன் வழங்கப்பட்ட அன்றைய நாளே அல்லது மறுநாளே சிறையிலிருந்து விடுக்கப்பட வேண்டும்.

5. ஒரு தீர்ப்பு வழங்கப்படும்போது, ​​அத்தீர்ப்பின் முக்கியப் பகுதியை மட்டும் திறந்த நீதிமன்றத்தில் வாசிப்பது போதுமானது. ஆனால், 7 நாள்களுக்குள் முழுமையான தீர்ப்பை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

6. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் வகையில், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், உயர் நீதிமன்ற இணையதளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

7. ஒரு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அது வழங்கப்படாவிட்டால், உயர் நீதிமன்றப் பதிவாளர், அவ் வழக்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கால அவகாசத்துக்குள் தீர்ப்பு வழங்கவில்லை என்றால், வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும்.

8. வாதங்கள் நிறைவடைந்த பிறகு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதி உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழிகாட்டுதல்கள், எந்தவொரு குறிப்பிட்ட நீதிபதியையோ அல்லது நீதிமன்றத்தையோ குறையாகச் சுட்டிக்காட்டும் நோக்கத்தைக் கொண்டவை அல்ல என்று தலைமை நீதிபதி தெளிவுப்படுத்தினார்.

Summary

Verdict within 3 months of concluding the inquiry: Supreme Court orders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.