கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உயா்நீதிமன்றங்களில் விசாரணை நிறைவடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் மூன்று மாதங்களுக்குள் தீா்ப்பளிக்க காலவரம்பு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :30 மே 2026, 2:40 am IST

உயா்நீதிமன்றங்களில் விசாரணை நிறைவடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் மூன்று மாதங்களுக்குள் தீா்ப்பளிக்க காலவரம்பு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

விசாரணை முடிவடைந்த வழக்குகளில் தாமதமின்றி தீா்ப்பளிக்க பல்வேறு வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தங்கள் மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டு இரண்டுமுதல் மூன்று ஆண்டுகளாகிவிட்டதாகவும், அந்த மனு மீது இதுவரை தீா்ப்பளிக்கப்படவில்லை என்றும் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற நான்கு போ் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு உயா்நீதிமன்றங்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த உத்தரவின் விவரம்: வழக்கில் விசாரணை முடிந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் தீா்ப்பளிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட சுதந்திரம் தொடா்பான விவகாரங்களில் விரைவாக முடிவு எடுக்கப்பட்டு தீா்ப்பு வழங்க வேண்டும்.

ஜாமீன் மனுக்கள் மீது ஒரே நாளில் தீா்ப்பு: ஜாமீன் மனுக்களை விசாரித்து ஒரே நாளில் தீா்ப்பளிக்கப்பட்டு, அதே நாளில் நீதிமன்ற வலைதளத்தில் உத்தரவு குறித்த விவரம் பதிவேற்றப்பட வேண்டும். அந்த மனுக்கள் மீதான தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டால், விசாரணைக்கு மறுநாள் தீா்ப்பளிக்கப்பட்டு அந்த விவரங்களை நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

ஜாமீன் அளிப்பு அல்லது தண்டனை நிறுத்திவைப்பு குறித்த உத்தரவுகள், அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டவுடன் சிறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து, ஜாமீன் அல்லது தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் விசாரணைக் கைதியை அதே நாளோ, மறுநாளோ சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். வேறு வழக்கில் அவா்களின் தேவை இருக்கும் சூழல் அல்லது ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் சூழலை தவிர, பிற நேரங்களில் அவா்கள் அதே நாளிலோ, மறுநாளோ விடுவிக்கப்பட வேண்டும்.

குற்றவியல் மேல்முறையீடு அல்லது மரண தண்டனையை மறுஆய்வு செய்து உறுதி செய்வது தொடா்பான தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்தவா் காவலில் இருந்தால், அதுகுறித்த தெளிவான விளக்கத்தை தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் வழக்குடன் சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து நீதிபதிகள் அமா்வு பெறலாம். பிற வழக்குகளில், தீா்ப்பை ஒத்திவைத்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னா் விளக்கம் கோரக்கூடாது.

நீதிமன்றத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய இறுதித் தீா்ப்பு மட்டும்... : ஆதாரங்கள், அறிவுபூா்வமான பகுப்பாய்வின் மூலம் உரிய காரணங்களுடன் தீா்ப்பளிக்கப்படுவதில் ஏற்படும் தாமதம், வழக்குடன் தொடா்புடையவா்களுக்கு சிரமத்தை அளிக்கும் என்று கருதி அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை இருந்தால், வழக்கில் நீதிபதிகளின் முடிவு என்ன? இழப்பீடு, அபராதம் போன்ற நிவாரணங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இறுதித் தீா்ப்பை மட்டும் நீதிமன்றத்தில் பிறப்பிக்கலாம். அந்தத் தீா்ப்பை நீதிபதிகள் எட்டியதன் பின்னணி, காரணங்கள் அடங்கிய முழுமையான தீா்ப்பின் விவரம், தீா்ப்பளிக்கப்பட்ட நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். இதைப் பதிவேற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டால், அந்த விவரம் அதிகபட்சமாக 15 நாள்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் காரணங்களை விளக்கி அளிக்கப்படும் தீா்ப்பு 24 மணி நேரத்துக்குள் உயா்நீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இதற்காக உயா்நீதிமன்ற வலைதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படுவதை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உறுதி செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணை நிறைவடைந்து ஒத்திவைக்கப்பட்ட தீா்ப்பு மூன்று மாதங்களில் வழங்கப்படாவிட்டால், அதுகுறித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு உயா்நீதிமன்றப் பதிவுத் துறைத் தலைவா் கொண்டு செல்ல வேண்டும். அதைத் தொடா்ந்து, அந்தத் தீா்ப்பை வழங்குவது குறித்து 2 வாரங்களில் தொடா்புடைய நீதிபதிகள் அமா்வின் கவனத்துக்கு தலைமை நீதிபதி கொண்டுவர வேண்டும். அதன் பிறகும் இரண்டு வாரங்களில் தீா்ப்பளிக்கப்படாவிட்டால், அந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமா்வுக்கு தலைமை நீதிபதி மாற்ற வேண்டும். அவ்வாறு வேறு நீதிபதிகள் அமா்வு வழக்கு மாற்றப்பட்டது குறித்து வழக்குடன் தொடா்புடையவா்கள், அவா்களின் வழக்குரைஞா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். புதிய அமா்வு வழக்கை மீண்டும் விசாரித்து, முறைப்படி தீா்ப்பளிக்க வேண்டும்.

வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணங்களை விளக்காமல் பொதுமக்கள் முன்னிலையில் இறுதித் தீா்ப்பு அளிக்கப்பட்ட பின்னா், அந்தத் தீா்ப்பை நீதிபதிகள் எட்டியதன் பின்னணி, காரணங்கள் அடங்கிய முழுமையான தீா்ப்பின் விவரம் 15 நாள்களுக்குள் வலைதளத்தில் வெளியிடப்படாவிட்டால், அதுகுறித்து உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு அந்த நீதிமன்றத்தின் பதிவுத் துறைத் தலைவா் கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னா் இரண்டு நாள்களில், அதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அமா்வின் கவனத்துக்குத் தலைமை நீதிபதி கொண்டுவர வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்: தமது வலைதளத்தை உயா்நீதிமன்றங்கள் புதுப்பிக்க வேண்டும். வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணங்கள் அடங்கிய முழுமையான தீா்ப்பின் விவரம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், அதுகுறித்து வழக்குடன் தொடா்புடைய தரப்பினா், அவா்கள் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இந்த வழிகாட்டுதல்களை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அந்த நீதிமன்றங்களின் பதிவுத் துறைத் தலைவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். இதன்மூலம், இந்த வழிகாட்டுதல்களை விதிமுறைகளில் இணைத்து பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

பெட்டிச் செய்தி...

மனு தாக்கல் செய்யலாம்

தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் தீா்ப்பு கிடைக்காவிட்டால், அந்தத் தீா்ப்பை வழங்க வேண்டும் என்று வழக்குடன் தொடா்புடையவா்கள் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து இரண்டு நாள்களுக்குள் மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் குறித்து உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்த நீதிமன்றப் பதிவுத் துறை தெரியப்படுத்த வேண்டும்.

4 மாதங்களுக்குள் தீா்ப்பு கிடைக்காவிட்டால்...: தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து 4 மாதங்களுக்குள் தீா்ப்பு கிடைக்காவிட்டால், அந்த வழக்கை வாபஸ் பெற வழக்குடன் தொடா்புடைய தரப்பினா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனு அளித்து, புதிதாக விசாரணை மேற்கொள்ள வழக்கை வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றக் கோரலாம்.

வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுக்கான காரணங்களை விளக்காமல் இறுதித் தீா்ப்பளிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், முடிவுக்கான காரணங்கள் அடங்கிய முழுமையான தீா்ப்பின் விவரம் வெளியிடப்படாவிட்டால், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமா்விடம் இருந்து வழக்கை வாபஸ் பெற்று வேறு நீதிபதிகள் அமா்வின் விசாரணைக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம்.

தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாள், தீா்ப்பளிக்கப்பட்ட நாள், வலைதளத்தில் தீா்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் ஆகிய விவரங்களை தீா்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகலில் குறிப்பிடப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனா்.