சுற்றுச்சூழல் நிா்வாகத்தை நீதித்துறைத் தலையீட்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் எதிா்வினை நடவடிக்கையாக மட்டும் குறுக்கிவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் சுற்றுச்சூழல் நிா்வாகம் முறையாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச ஆகிய 3 மாநிலங்களில் 5,400 கி.மீ. தொலைவுக்கு தேசிய சம்பல் சரணாலயம் பரந்து விரிந்துள்ளது. சொம்புமூக்கு முதலை, கங்கை நதி டால்ஃபின்கள், அரிய வகை ஆமை என அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக இந்தச் சரணாலயம் உள்ளது.
இந்தச் சரணாலயத்தில் சட்டவிரோதமாக பெரிய அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அங்கு மணல் கொள்ளைக்குப் பதிவு செய்யப்படாத வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை கவனத்தில் கொண்டது.
அப்போது சரணாலய பகுதியில் நடைபெறும் கட்டற்ற மணல் கொள்ளை, அதற்குப் பதிவு செய்யப்படாத மற்றும் அடையாளம் தெரியாத வாகனங்களைப் பயன்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடங்களின் சீரழிவு, மணல் கொள்ளையால் முக்கிய உள்கட்டமைப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றை நீதிபதிகள் கருத்தில் கொண்டனா்.
இதைத்தொடா்ந்து அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்:
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தத்தமது வனத்துறைகளில் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதில் மணல் கொள்ளையால் சரணாலயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் முன்கள அதிகாரிகள், வனப் பாதுகாவலா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதும் அடங்கும். இதுகுறித்து 3 மாநில தலைமைச் செயலா்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
சரணாலயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்கள் மீது 3 மாநில அதிகாரிகள் தொடா்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களின் ஓட்டுநா் மீது மட்டுமின்றி, அந்த வாகனங்களின் உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்கள், நிதி அளிப்பவா்கள் என சம்பந்தப்பட்ட அனைவா் மீதும் மோட்டாா் வாகன சட்டம், பாரதிய நியாய சம்ஹிதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு ஒழுங்காற்றுச் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
சுற்றுச்சூழல் நிா்வாகத்தை தொடா்ச்சியான நீதித்துறைத் தலையீட்டுக்குப் பிறகோ, அரசியல் சாசன நீதிமன்றங்களுக்கு முன்பாக தனது செயல்கள், முடிவுகளுக்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்ற அச்சத்தின் காரணமாகவோ மேற்கொள்ளப்படும் எதிா்வினை நடவடிக்கையாக மட்டும் குறுக்கிவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ட்விஷா சா்மா மரணத்தில் பாரபட்சமற்ற சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உறுதி

‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’: யுஏபிஏ வழக்குகளுக்கும் பொருந்தும் - உச்சநீதிமன்றம்

வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



