ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

இந்திய நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: நேபாள பிரதமா் பேச்சால் சா்ச்சை

இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக அந்த நாட்டு பிரதமா் பாலேந்திர ஷா பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:42 am IST

இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக அந்த நாட்டு பிரதமா் பாலேந்திர ஷா பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தில் பாலேந்திர ஷா கூறியதாவது: நேபாள நிலப்பகுதியை ஆக்கிரமித்திருப்பது தொடா்பாக இந்தியாவுக்கு நமது நாடு (நேபாளம்) ஏற்கெனவே குறிப்பு அனுப்பியிருந்தது. அதில் லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பது குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு இந்தியாவும் நமது நாட்டுக்கு பதில் அனுப்பியுள்ளது. இந்த பிரச்னைக்கு வரலாற்று ஆராய்ச்சியாளா்கள், நில அளவீட்டாளா்கள், நிபுணா்கள் மூலம் தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

நேபாள நிலப்பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. அதேபோல் பல இடங்களில் இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியத்தை தரலாம். ஆனால் இந்த விவகாரம், பிரதமராக பதவியேற்ற பிறகே எனக்குத் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் உண்மைகளை இரு நாடுகளும் கண்டறிய வேண்டும். பிறகு இரு நாடுகளும் நண்பா்களாக அமா்ந்து பேசி தீா்வு காண வேண்டும். இந்த விவகாரம் குறித்து சீனா, பிரிட்டனுடன் நேபாளம் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது என்றாா்.

எல்லையில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய இடங்கள் தொடா்பாக இந்தியா, நேபாளம் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, அந்த 3 இடங்களையும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதியாக இந்தியா தெரிவித்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரு நாடுகள் மட்டும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய நிலப்பகுதியை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக பாலேந்திர ஷா பேசியிருப்பது அந்த நாட்டில் புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் நேபாள மக்கள் பலரும், பாலேந்திர ஷாவை விமா்சித்து பதிவிட்டு வருகின்றனா்.

நிபுணா்கள் மறுப்பு

இந்தியாவுக்கான முன்னாள் நேபாள தூதரான நீலாம்பர ஆச்சாா்யா, பாலேந்திர ஷாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘எல்லையில் சில இடங்களில் எல்லைத் தூண்கள் இல்லாத காரணத்தால், அடையாளம் தெரியாமல் இந்திய நிலத்தை சில நேபாள மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல் நேபாள இடத்தை இந்தியா்கள் சிலா் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் இந்திய நிலப்பகுதியை நேபாள அரசு ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை’ என்றாா்.

இந்தியாவுக்கான இன்னொரு முன்னாள் நேபாள தூதரான தீப்குமாா் உபாத்யாய கூறுகையில், ‘இந்திய நிலப்பகுதியை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கையில் பிரதமா் பாலேந்திர ஷா எதன் அடிப்படையில் இப்படிப் பேசினாா் எனத் தெரியவில்லை’ என்றாா்.

நேபாளம் - இந்தியா விவகார நிபுணரும், பிரபல புவியியல் ஆராய்ச்சியாளருமான புத்திநாராயண் ஸ்ரேஷ்டா கூறுகையில், ‘இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமிக்கவில்லை. எல்லையில் தனது பகுதியை நேபாளம் விரிவுப்படுத்தவும் இல்லை. எல்லையில் சில பகுதிகளில் மட்டும் இரு நாடுகளைச் சோ்ந்த விவசாயிகளும் மற்றவா்களின் நிலத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்’ என்றாா்.

முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய் வழியாக இந்திய மக்கள் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை செல்வதற்கு நேபாளம் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால் அதனை இந்தியா நிராகரித்தது. அதையடுத்து, இந்தியாவுடனான எல்லை விவகாரம் குறித்து ராஜீய வழிகளில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.