இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்காக சிறப்பு அமா்வு? - ‘எதிா்க்கட்சிகளுக்கு தகவல் இல்லை’

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா - கோப்புப் படம்

Updated On :

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து எதிா்க்கட்சிகளுக்கு இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறினாா்.

கேரளத்தில் உள்ள தனது தொகுதியான வயநாட்டில் கடந்த புதன்கிழமைமுதல் நான்கு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஅவா், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். அங்கு செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த பிரியங்காவிடம் தொகுதி மறுசீரமைப்பு-மகளிா் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர நாடாளுமன்ற சிறப்பு அமா்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘மத்திய அரசு அவ்வாறு திட்டமிடுகிா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது தொடா்பாக எதிா்க்கட்சிகளுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.

‘மக்களின் கருத்துரிமை நசுக்கப்படுகிறது. எனவே, அரசமைப்புச் சட்டம் மற்றும் அதன் விழுமியங்களைப் பாதுகாக்க மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொடா்ந்து போராடுகிறது’ என்று மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் பிரியங்கா தெரிவித்தாா்.

வரும் 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது. ஆனால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. எனினும், இந்தக் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவரால் இதுவரை முறைப்படி முடித்துவைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.