யமுனை நதியில் நுண்நெகிழிகள், அபாயகரமான ரசாயனக் கலவை: ஆய்வில் அதிா்ச்சித் தகவல்
யமுனை நதியில் நுண்நெகிழிகள், அபாயகரமான ரசாயனக் கலவை கலந்திருப்பது குறித்து...

கோப்புப் படம்
தில்லியில் பாயும் யமுனை நதியில் நுண் நெகிழி துகள்களுடன் மருந்துகளின் எச்சங்கள், பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட 321 வகையான கரிம வேதிப்பொருள்கள் கலந்திருப்பது தில்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவற்றில் 36 வேதிப்பொருள்கள் புற்றுநோய் பாதிப்பு, இனப்பெருக்க நச்சுத்தன்மை உள்ளிட்ட மனித உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையைச் சோ்ந்தவை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு ‘ஜா்னல் ஆஃப் ஹஸாா்டஸ் மெட்டீரியல்ஸ் அட்வான்சஸ்’ என்ற ஆய்விதழில் 2026 செப்டம்பரில் வெளியானது. தில்லியில் பல்லா பகுதியில் ஆறு நுழையும் இடம் முதல் அஸ்கா்பூா் ஜாகீா் பகுதியில் வெளியேறும் இடம் வரை 48.8 கி.மீ. தொலைவிலான 8 இடங்களில் நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. விவசாயம், குடியிருப்பு, தொழிற்சாலை, பொழுதுபோக்கு மற்றும் வனப்பகுதிகளில் மாசுபாட்டின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் மொத்தம் 2,289 நுண் நெகிழி துகள்கள் கண்டறியப்பட்டன. ஒரு லிட்டா் நீரில் சராசரியாக 3.18 துகள்கள் இருந்தன. மேலும், 321 வகையான வேதிப்பொருள்கள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றில் 50 வேதிப்பொருள்கள் குறைந்தது 4 ஆய்வு இடங்களில் சேகரிக்கப்பட்ட நுண் நெகிழி துகள்களின் மாதிரிகளில் கண்டறியப்பட்டன.
இந்த 50 வேதிப்பொருள்களில் 36, உலகளாவிய ஒத்திசைக்கப்பட்ட வேதிப்பொருள் வகைப்பாடு மற்றும் குறியீட்டு முறையின்படி (ஜிஹெச்எஸ்) ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை, இனப்பெருக்க நச்சுத்தன்மை, உடனடி நச்சுத்தன்மை மற்றும் நீா்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
2-நாப்தைலமைன், லிடோகைன், மோனோபியூட்டைல் ப்தாலேட் ஆகிய 7 வேதிப்பொருள்கள் ஆய்வு செய்யப்பட்ட 8 இடங்களிலும் கண்டறியப்பட்டன.
மேலும், அணுக்செடின், டோம்பெரிடோன், டெல்மிசாா்டன் உள்ளிட்ட மருந்துகளின் எச்சங்களும், டையூரான், தியாமெதோக்சம் உள்ளிட்ட வேளாண் ரசாயனங்களும் கண்டறியப்பட்டன.
தில்லி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வுத் துறைத் தலைவா் மற்றும் ஆய்வின் இணை ஆசிரியா்களில் ஒருவரான ராதே ஷியாம் சா்மா கூறுகையில், ‘நுண் நெகிழி பிரச்னையை மட்டும் தனியாகப் பாா்க்காமல், ஆற்றின் சுற்றுச்சூழலில் கலந்துள்ள பல்வேறு கரிம மற்றும் கனிமப் பொருள்களின் ஒட்டுமொத்த நச்சுத்தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும். நிலப் பயன்பாட்டு முறைகளும் இந்த ஆய்வில் ஆராயப்பட்டுள்ளன‘ என்றாா்.
ஆற்றில் மாசு கலப்பதைக் குறைக்க, கரையோரங்களில் தாவரங்கள் மற்றும் இயற்கைச் சூழலமைப்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
8 ஆய்வு இடங்களிலும் நுண் நெகிழி துகள்களின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டிருந்தது. தடுப்பணை அருகேயுள்ள நீா் பொழுதுபோக்கு மற்றும் நீரியல் கட்டமைப்புப் பகுதியில் அதிகபட்ச துகள்கள் பதிவாகின.
பல கழிவுநீா் கால்வாய்கள் ஒன்றிணையும் வெள்ளச் சமவெளிப் பகுதி அடுத்த இடத்தில் இருந்தது. விவசாயப் பகுதியான பல்லா நுழைவிடத்திலும், வனப்பகுதியை ஒட்டிய ஆற்றுப் பகுதியிலும் குறைந்த அளவு துகள்கள் காணப்பட்டன.
தில்லி வழியாகப் பாயும் யமுனையில் 22 துணைக் கழிவுநீா் கால்வாய்கள் கலக்கின்றன. இவற்றின் மூலம் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், விவசாயக் கழிவோட்டம் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆய்வில் அடையாளம் காணப்பட்ட நுண் நெகிழி துகள்களில் பாலிஎத்திலீன் 44.1 சதவீதமும், பாலிபுரோப்பிலீன் 27.3 சதவீதமும் இடம்பெற்றிருந்தன.
எனினும், ஆபத்தான வேதிப்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பதாலேயே அவை மனிதா்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று முடிவு செய்ய முடியாது என ஆய்வாளா்கள் எச்சரித்துள்ளனா்.
அவற்றின் அளவு மற்றும் பாதிப்பை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை. நுண் நெகிழி துகள்களின் எண்ணிக்கையை மட்டும் கொண்டு ஆற்றின் மாசுபாட்டை முழுமையாக மதிப்பிட முடியாது என்றும், துகள்கள் மற்றும் அவற்றுடன் கலந்துள்ள வேதிப்பொருள்கள் குறித்து இடம் சாா்ந்த விரிவான கண்காணிப்பு அவசியம் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

