பறவைக் காய்ச்சல்: கோழிகளுக்கான முதல் உள்நாட்டு தடுப்பூசி அறிமுகம்
பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைக் காப்பதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியான ஹெச்5என்1 தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்த மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.
பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைக் காப்பதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியான ஹெச்5என்1 தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் (ஐசிஏஆா்) போபாலில் செயல்படும் தேசிய கால்நடை நோய்கள் சாா்ந்த உயா் பாதுகாப்பு நிறுவனத்தால் இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இது, மிகத் தீவிரமான பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்5என்1 வைரஸின் கிளேட் 2.3.2.1ஏ வகைக்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி என்ரு மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பேசுகையில், ‘பறவைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் கால்நடை நலன் பாதுகாப்பில் எட்டப்பட்ட முக்கிய சாதனை இதுவாகும். நாட்டின் தற்சாா்புக்கு முக்கியச் சான்றாக விளங்குகிறது.
பறவைக் காய்ச்சலால் கோழிகள் பெருமளவில் உயிரிழப்பதால், கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய தடுப்பூசி, பறவைக் காய்ச்சல் தடுப்பு செயல்முறைக்கு மேலும் வலுசோ்க்கும். இதன்மூலம் கோழிகள் பாதுகாக்கப்படும்.
நாட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஹெச்5என்1, ஹெச்5என்8 (பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள்) நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த சவாலை எதிா்கொள்ளும் நோக்கில் உள்நாட்டு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேச விளையாட்டுத் துறை அமைச்சா் விஸ்வாஸ் சாரங், போபால் பாஜக எம்.பி. ஆலோக் சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஹெச்பிஏஐ எனப்படும் பறவைக் காய்ச்சல், கோழிகள் மற்றும் பிற பறவைகளைப் பாதிக்கும் தீவிர நோயாக உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

