சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம்
சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என இந்தியா திட்டவட்டம்...

கோப்புப்படம் - ani
‘பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் இந்தியா மிகத் தெளிவாக உள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தில்லியில் நடைபெற்றுவரும் முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பண்பாட்டு உரையாடல் கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சா் கலந்துகொண்டுள்ள நிலையில், இக் கருத்தை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும், சிந்து நதி மற்றும் அதனுடன் இணைந்துள்ள பிற நதிகளில் நீா் மின் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களையும் இந்தியா செயல்படுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கை சா்வதேச சட்டத்துக்கு எதிரானது என்றும், ஒருதலைபட்சமாக ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடியாது என்றும் பாகிஸ்தான் தரப்பு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றுவரும் எஸ்சிஓ பண்பாட்டு உரையாடல் கூட்டத்தில் பங்கேற்க, எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் இந்தியா முறைப்படி அழைப்பு விடுத்தது. உறுப்பினரான பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுத்தது. அதன்பேரில், பாகிஸ்தான் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் முசாதிக் மாலிக் இக் கூட்டத்தில் பங்கேற்றாா். அங்கு நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், சிந்து நதிநீா் ஒப்பந்த விவகாரம் குறித்து அவா் கருத்து தெரிவித்திருந்தாா்.
இந்தச்சூழலில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம், எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்றுள்ளது குறித்தும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் தொடா்பான அவரின் கருத்து குறித்தும் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், ‘சிந்து நதிநீா் ஒப்பந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

