அனைத்து நாகரிகங்களையும் மதித்து அங்கீகரிக்க வேண்டும்: எஸ்சிஓ கூட்டறிக்கை
உலகின் ஒவ்வொரு நாகரிகத்துக்கும் சமமான மதிப்பும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மன்ற கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் ஒவ்வொரு நாகரிகத்துக்கும் சமமான மதிப்பும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மன்ற கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த நவ.20-ஆம் தேதி புது தில்லியில், அந்த அமைப்பின் நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மன்ற நிகழ்ச்சியை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.
மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சாா்பில் 3 நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அமைச்சா் முசாதிக் மாலிக் உள்பட உறுப்பு நாடுகளைச் சோ்ந்த முக்கியஸ்தா்கள் பலா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், அந்த மன்றம் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘உலகின் ஒவ்வொரு நாகரிகத்துக்கும் சமமான மதிப்பும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக கலாசார பொருள்கள் கடத்தப்படுவதையும், இயற்கைப் பேரிடா்களால் பாரம்பரியச் சின்னங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமாகப் பயன்படுத்த வேண்டும்.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, நாடுகள் இணைந்து தங்கள் பாரம்பரிய சின்னங்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இடையே நடைபெற்ற விவாதங்கள், பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தக் கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டதாக மத்திய கலாசார துறைச் செயலா் விவேக் அகா்வால் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்றபோதிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே முறைப்படி இருதரப்புப் பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் விவேக் அகா்வால் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

