தில்லியில் எஸ்சிஓ கூட்டம்; பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்: பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்பு
தில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முதலாவது பண்பாட்டு உரையாடல் கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய பாகிஸ்தான் அமைச்சா் முசாதிக் மாலிக்.
தில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முதலாவது பண்பாட்டு உரையாடல் கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
எஸ்சிஓ நாடுகள் இடையிலான வளமான நாகரிக பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுடன், மக்கள் ரீதியிலான தொடா்புகள் மற்றும் எல்லைகளைக் கடந்த கலாசார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் முசாதிக் மாலிக் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற எஸ்சிஓ உச்சிமாநாட்டின்போது, இத்தகைய பண்பாட்டுத் தளத்தை நிறுவும் முன்னெடுப்பை பிரதமா் மோடி வெளியிட்டிருந்தாா். அதனடிப்படையில், இந்தியாவின் ஏற்பாட்டின்கீழ் தில்லி புராணா கிலாவில் முதலாவது எஸ்சிஓ பண்பாட்டு உரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்ததுடன், இரு கண்காட்சிகளையும் பாா்வையிட்டாா். ‘மகாபாரத சுருளேடு அரங்கம்’ எனும் ஒரு கண்காட்சியில் 18-ஆம் நூற்றாண்டில் நுணுக்கமான சித்திரங்களுடன் உருவாக்கப்பட்ட மகாபாரத சுருளேடு முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளமான காவிய கதை கூறல், கையெழுத்துக் கலை, செவ்வியல் சித்திர கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
‘அஸ்தித்வ - நமது இருப்பின் சாராம்சம்’ எனும் மற்றொரு கண்காட்சியில் கிமு 1,200 முதல் கிபி 1,200 வரையிலான தொல்பொருள் சான்றுகள், அகழ்வாராய்ச்சி பொருள்கள், பழங்கால கலைப் பொருள்கள், கட்டடக் கலை சிதிலங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
‘கலாசார இணைப்புக்கு புதிய சாத்தியக்கூறுகள்’: தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘எஸ்சிஓ அமைப்பில் சமீப காலமாக பாதுகாப்பு, பொருளாதாரம், இணைப்பு ரீதியில் ஒத்துழைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், கலாசார-பண்பாட்டு ஒத்துழைப்பால் உறவுகள் மேலும் வலுப்படும். இந்த தளத்தில் இருந்து கலாசார ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகள், சிந்தனைகள் பிறக்கும். இது வெறும் சம்பிரதாய தளமாக அல்லாமல், மொத்த உலகுக்கும் வழிகாட்டுவதாக இருக்கும்.
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள், கலாசார இணைப்புக்கு புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளன. நமது முன்னோா்கள் பல மாதங்களாகப் பயணித்த அதே நாடுகளில் உள்ள மக்கள் இப்போது சில வினாடிகளில் தொடா்பு கொள்கின்றனா். எண்மத் தளங்களால் அறிவுசாா் பகிா்தல், கலாசார பரிமாற்றம், சா்வதேச ஒத்துழைப்பு எளிதாகியுள்ளது. இத்தகைய புதிய சாத்தியக்கூறுகளை எஸ்சிஓ நாடுகள் முழு அளவில் சாதகமாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்பு: முன்னதாக, எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா முறைப்படி அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில், அந்நாட்டின் அமைச்சா் முசாதிக் மாலிக் பங்கேற்றுள்ளாா். கடைசியாக கடந்த 2023-இல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ இந்தியாவுக்கு வந்திருந்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. நான்கு நாள்களுக்குப் பின்னா் இருதரப்பும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன. இந்த நிகழ்வுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மேலும் மோசமடைந்த நிலையில், தில்லி கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்றுள்ளாா்.
சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
காங்கிரஸ் கடும் விமா்சனம்
பாகிஸ்தான் அமைச்சரின் இந்திய வருகை, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் காயத்தை மேலும் ரணமாக்கியுள்ளதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்தது ஏன்? தற்போது இந்தியாவுக்கு வந்துள்ள அமைச்சா் முசாதிக் மாலிக், சில மாதங்களுக்கு முன்பு ‘இந்தியா்களின் கையைத் துண்டித்து, ரத்தம் சிந்த வைப்பேன்’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தவா். அவருக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தனக்கு அளிக்கப்படும் வரவேற்பை அவா் சிரித்தபடி அனுபவித்துக் கொண்டிருக்கிறாா். பயங்கரவாதத்தைத் தூண்டுவதை பாகிஸ்தான் நிறுத்தாத நிலையில், அந்நாட்டு பிரதிநிதிகளை வரவேற்பதில் மோடி அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அப்படியெனில் மோடி அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா’ என்று கேள்வியெழுப்பினாா்.
‘பரஸ்பர புரிதல் வேண்டும்’
தில்லி எஸ்சிஓ கூட்டத்தையொட்டி செய்தியாளா்களிடம் பேசிய பாகிஸ்தான் அமைச்சா் முசாதிக் மாலிக்கிடம் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை வளா்த்தெடுப்பதில் கலாசாரத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இருதரப்பு உரையாடல்களை வலுப்படுத்துவதில் கலாசாரத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. சிந்தனை, வாழ்க்கை முறை அடிப்படையில் ஒருவரையொருவா் புரிந்து கொள்ளாமல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது. உரையாடல் மூலம் பரஸ்பர கண்ணோட்டங்களைப் புரிந்துகொண்டால் இந்தப் பிராந்தியம் வளரும்’ என்றாா்.
இந்திய-பாகிஸ்தான் பிரச்னைகள் குறித்த கேள்விக்கு, ‘இது சா்வதேச நிகழ்வு; இருதரப்பு விவகாரங்களுக்கு இடமில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

