இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேல் ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பாராட்டு!
இந்தியாவின் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான ஹெச்பிவி வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஹெச்பிவி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட நிகழ்வில் மாணவிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி - கோப்புப் படம்
இந்தியாவின் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான ஹெச்பிவி வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான ஒரு படி என்று பிரதமர் மோடி சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “நோய்த் தடுப்பு சுகாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.
ஒவ்வொரு தடுப்பூசியும், பெண் குழந்தைகளைக் கருப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் ஒரு படியாகும்.
இந்த மகத்தான சாதனையை சாத்தியமாக்கிய அனைவரின் முயற்சிகளுக்கும் எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஹெச்பிசி தடுப்பூசி திட்டம் பிப். 28, 2026 அன்று தொடங்கிய நிலையில், வெறும் 9 மாதங்களுக்குள் ஒரு கோடி என்ற இலக்கைக் கடந்துள்ளது.
இத்திட்டம் ஆண்டுதோறும் சுமார் 1.15 கோடி முதல் 1.2 கோடி வரையிலான 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கில் கிட்டத்தட்ட 87 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 29.33 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிகார் 13.70 லட்சமும், குஜராத் 7.75 லட்சமும் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளன.
குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் என 6 மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட இலக்கில் 100% தடுப்பூசிகளைச் செலுத்தியதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
பிரதமர் மோடியால் ராஜஸ்தானில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14 வயது சிறுமிகளுக்கு விருப்பத்தின் பேரில், ஒற்றை டோஸ் ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்த பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம்.
கார்டசில் - 4 வகைத் தடுப்பூசி இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் கணிசமான பாதிப்புகளுக்கு காரணமான வகை 16 மற்றும் 18 உள்பட, 4 வகையான ஹெச்பிவி வைரஸ்களுக்கு எதிராகப் பாதுகாக்கிறது, அதேபோல, பிறப்புறுப்பு மருக்கள் தொடர்பான பாதிப்புகளை உண்டாக்கும் வகை 6 மற்றும் 11-க்கு வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்குகிறது.
Summary
More than one crore HPV vaccines have been administered under India's nationwide vaccination program.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


