நேபாளத்திற்கு ரூ. 24,000 கோடி வளர்ச்சித் திட்டம்! மோடி அறிவிப்பு
நேபாளத்தின் வளர்ச்சிக்கு ரூ. 24,000 கோடி மேம்பாட்டுத் தொகுப்பு வழங்கியது பற்றி..

பிரதமர் மோடி
நேபாளத்திற்கு ரூ. 24,000 கோடியில் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.
நேபாள நாட்டின் பிரதமர் பாலேந்திர ஷா, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இந்தியா-நேபாளம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக வர்த்தகம், எரிசக்தி, நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், நேபாளத்திற்காக ரூ. 24,000 கோடி நேபாள மதிப்பிலான மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.
இரு தலைவர்களும் காணொலி வாயிலாக, நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கும் நேபாளத்தின் ஜனக்பூர் கோயிலுக்கும் இடையே நேடி பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தனர்.
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான உறவு இமயமலையைப் போல உறுதியானதாகவும், பெருங்கடல்களைப் போல விரிவானதாகவும் உள்ளது என்று நேபாளத் தலைவர் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.
நம்பகமான அண்டை நாடாக, நேபாளத்தில் இயற்கை பேரிடர்கள் அல்லது கடினமான காலங்கள் ஏற்படும் போதெல்லாம், இந்தியா எப்போதும் முதலில் உதவிக்கரம் நீட்டும். மேலும், பரஸ்பர மரியாதை, அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் மாறாத நல்லெண்ணம் ஆகியவை இந்த உறவின் அடித்தளங்கள் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், இந்தியா-நேபாள உறவின் வலிமையை எடுத்துரைத்ததுடன், அண்டை நாடான நேபாளத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான உறவு என்பது வெறும் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவு மட்டுமல்ல; இது ஒரு நெருங்கிய பிணைப்பு, அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது.
நாங்கள் மகிழ்ச்சியையும் சவால்களையும் பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

