இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ராகுல் காந்தி - PTI
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை சிறப்புக் கூட்டத்தொடர் நவ. 30 அன்று தொடங்கப்படவுள்ளது. இதில், அரசியலமைப்பு (132-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்களுக்கான திருத்த மசோதா என 3 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்கான, திருத்தப்பட்ட வரைவுச் சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாக்களின்படி, இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50% தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 550-ல் இருந்து 850 ஆக உயர்த்தப்படவுள்ளது. அதேபோல, மாநில சட்டப்பேரவைத் தொதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது.
2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 33% மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்குள் தொகுதி எல்லைகளை மாற்றியமைத்து, எஸ்சி\எஸ்டி பிரிவினருக்கான இடங்களைத் தீர்மானிக்கவும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. அதேநேரம், மாநிலங்களுக்கான தொகுதி விகிதங்களை (1971-ஆம் ஆண்டின் அடிப்படையில்) 2051-ஆம் ஆண்டு வரை மாற்றாமல் நீடிக்கச் செய்யவும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.
மசோதாவை நிறைவேற்ற திமுக ஆதரவு தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ராகுல் காந்தி பேசினார்.
அதில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர்கள் கைப்பற்றிவிட்டனர். வாக்குப்பதிவையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இப்போது ஒட்டுமொத்த தொகுதிகளின் கட்டமைப்பையே சிதைக்க முயலுகின்றனர். நமது நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றும் பாஜகவின் முயற்சியை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அது என்றும் நடக்காது.
தங்களுக்கு விருப்பமான தொகுதிகளில், வேண்டிய நேரத்தில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடலாம் என்ற பாஜகவின் எண்ணம் காலாவதியாகிவிட்டது. அவர்களால் இப்போது முறைகேட்டில் ஈடுபட முடியாது. அவர்களைப் பற்றி இந்தியாவுக்கே தெரிந்துவிட்டது.
நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல்களில் திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று இந்தியாவின் 80% மக்களும், கிட்டத்தட்ட 100% ஜென் ஸீ தலைமுறையினரும் நம்புவது எங்களது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தற்போது, இந்த மூன்று பேரும் ஒரு புதிய திட்டத்துடன் வந்துள்ளனர். இது ஒரு தப்பிக்கும் வழி. நாங்கள் அடைத்து வைத்த வழிகளுக்குப் பதிலாகப் புதிய வழிகளை அவர்கள் திறக்கப் பார்க்கின்றனர்.
இந்தப் புதிய தப்பிப்பதற்கான வழி எப்படிப்பட்டது, அதன் விளைவு எப்படியிருக்கும் என உங்களுக்கு நான் விளக்குகிறேன்.
2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியற்ற 14 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி 2024 தேர்தலே சட்டவிரோதமானது. ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. பிகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை முன்னரே நாங்கள் உங்களிடம் காட்டினோம். அஸ்ஸாமில் பாஜகவுக்கு ஏற்றவாறு மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசுகையில், “மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை நாங்கள் சுற்றி வளைத்துவிட்டோம். அவர்களுக்கே அது தெரியும். நான் ஏற்கனவே கூறியது போல ஞானேஷ் குமார் பற்றிய போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரால் தப்பிக்க முடியாது. அந்த முக்கிய ஆதாரங்களை நாங்கள் விரைவில் வெளியிடுவோம்” என்று ராகுல் தெரிவித்தார்.
Summary
Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has spoken out against the delimitation bill.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

