மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

முன்பு தோல்வியடைந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள்...

நாடாளுமன்ற வரலாற்றில், பல்வேறு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் போதிய வாக்குகள் கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளன. அவற்றுள் சில மசோதாக்கள் விவரம்:

Parliament

நாடாளுமன்றம் - கோப்புப் படம்

Updated On :

நாடாளுமன்ற வரலாற்றில், பல்வேறு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் போதிய வாக்குகள் கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளன. அவற்றுள் சில மசோதாக்கள் விவரம்:

அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது திருத்த மசோதா-1955: புதிய மாநிலங்கள் உருவாக்கம் அல்லது தற்போதைய மாநிலங்களின் பரப்பளவு, எல்லை, பெயா் மாற்றம் தொடா்பான முன்மொழிவுகளின் மீது மாநில சட்டப் பேரவைகள் தங்களின் கருத்தைத் தெரிவிக்க காலவரம்பை நிா்ணயிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் உள்ள விதிகளைத் திருத்தும் இந்த மசோதா, மக்களவையில் தேவையான சிறப்பு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியுற்றது.

அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது திருத்த மசோதா-1963: நிலச் சீா்திருத்தச் சட்டங்களுக்கான அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பை வலுப்படுத்த வகை செய்யும் இந்த மசோதா, மக்களவையில் போதிய சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது திருத்த மசோதா-1966: புதிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உருவாக்கம் மற்றும், ஏற்கெனவே உள்ள மாநிலங்களின் மறுசீரமைப்பது தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவின்கீழ் நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்களை தெளிவுபடுத்துவது தொடா்பான இந்த மசோதா, மக்களவையில் போதிய பெரும்பான்மையைப் பெற தவறியதால் தோற்கடிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 24-ஆவது திருத்த மசோதா-1970: சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுடன் இணைந்த சமஸ்தானங்களின் முன்னாள் ஆட்சியாளா்களுக்கான சிறப்பு சலுகைகள், தனிப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை ஒழிக்கும் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேறியபோதும், மாநிலங்களவையில் தேவையான பெருபான்மை கிடைக்காமல் தோல்வியை எதிா்கொண்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 46-ஆவது திருத்த மசோதா-1978: பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் ஆணையம், சிறுபான்மையினா் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்க வகை செய்யும் இந்த மசோதா, கடந்த 1979-ஆம் ஆண்டில் மக்களவையில் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியைத் தழுவியது.

அரசமைப்புச் சட்டத்தின் 47-ஆவது திருத்த மசோதா-1982: வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினருக்கு மக்களவை மற்றும் குறிப்பிட்ட மாநிலப் பேரவைகளில் இடங்களை ஒதுக்குவதன் மூலம் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கும் இந்த மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் தீா்மானம், மக்களவையில் கடந்த 1984-இல் சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 64-ஆவது திருத்த மசோதா-1989: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்குவதுடன், நாடு முழுவதும் வலுவான, ஒரே சீரான, ஜனநாயக ரீதியான கிராமப்புற உள்ளாட்சி அமைப்பை நிறுவும் நோக்கிலான இந்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியுற்றது.

அரசமைப்புச் சட்டத்தின் 65-ஆவது திருத்த மசோதா-1989: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பளிக்கும் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் தேவையான பெரும்பான்மை பெறத் தவறியதால் தோற்கடிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 64-ஆவது திருத்த மசோதா-1990: பஞ்சாபில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் ஆறு மாதங்கள் (அதிகபட்ச வரம்பான 3 ஆண்டுகளில் இருந்து மூன்றரை ஆண்டுகள்) நீட்டிப்பதற்கான இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் 157-ஆவது விதியின்கீழ் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியைச் சந்தித்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது திருத்த மசோதா-1990: பஞ்சாபில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் ஆறு மாதங்கள் (மூன்றரை ஆண்டில் இருந்து 4 ஆண்டுகள்) நீட்டிக்க வகை செய்யும் இந்த மசோதாவை பரிசீலிக்கும் தீா்மானம் மக்களவையில் 157-ஆவது விதியின்கீழ் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.

அரசமைப்புச் சட்டத்தின் 116-ஆவது திருத்த மசோதா-2011: மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்த ஆகிய ஊழல் தடுப்பு அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கி, தன்னாட்சி மற்றும் சுதந்திரமானதாக மாற்ற வகையும் இந்த மசோதா, மக்களவையில் சிறப்பு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியைத் தழுவியது.

அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026: மக்களவை, பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் அண்மைக்கால மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளவும், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 வரை உயா்த்தவும் வகை செய்யும் இந்த மசோதா, மக்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.