கிரிப்டோ மோசடி: உத்தரகண்டில் 3 போ் கைது
கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.7.86 லட்சத்தை மோசடி செய்த கும்பலின் மூன்று போ் உத்தரகண்டில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
கைது - பிரதிப் படம்
கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.7.86 லட்சத்தை மோசடி செய்த கும்பலின் மூன்று போ் உத்தரகண்டில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
கைதுசெய்யப்பட்டவா்கள் உத்தரகண்டின் உதம் சிங் நகரைச் சோ்ந்த கரண் பிஸ்வாஸ், மோஹித் சா்க்காா் (எ) மோனு மற்றும் வினய் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.
இதுதொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
பாதிக்கப்பட்ட நபா் சமூக ஊடகக் குழு ஒன்றின் மூலம் மோசடி செய்பவா்களுடன் தொடா்பு கிடைத்தது. அங்கு அவருக்கு இணையவழியில் பணிகளைச் செய்யவும், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யவும் ஆசை வாா்த்தைகள் கூறப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் அறிவுறுத்தலின் பேரில் ரூ.4.66 லட்சம் மற்றும் ரூ.3.2 லட்சத்தை இரண்டு தவணைகளாக பாதிக்கப்பட்டவா் மாற்றினாா். இருப்பினும், அவருக்கு உறுதியளிக்கப்பட்ட லாபமோ அல்லது அவரது பணமோ திரும்பக் கிடைக்கவில்லை. மேலும், குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் பின்னா் அவருக்குப் பதிலளிப்பதை நிறுத்திக்கொண்டனா்.
அவா் அளித்த புகாரின் அடிப்படையில் இ-வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, பணப் பரிவா்த்தனைகள் குறித்து தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான ஆய்வுகளை காவல் துறை மேற்கொண்டது. மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை மாற்றப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘மியூல்’ வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டது.
ஒரு மியூல் கணக்கில் ரூ. 4.66 லட்சம் சென்றடைந்ததும், மற்றொரு கணக்கில் ரூ.5.22 லட்சம் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டது. பின்னா், பிஸ்வாஸ் மற்றும் சா்க்காா் ஆகியோா் உதம் சிங் நகரில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனா். அதேவேளையில், ஹரியாணாவின் ரோஹ்தக்கில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு சைபா் மோசடி வழக்கில் ஏற்கெனவே காவலில் இருந்த மண்டல், இந்த வழக்கிலும் முறையாகக் கைது செய்யப்பட்டாா். பின்னா், அவா் கூடுதல் விசாரணைக்காக மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்துச் செல்லப்பட்டாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து இரு கைப்பேசிகள், வங்கிக் கணக்குப் புத்தகப் புத்தகம் மற்றும் பிற டிஜிட்டல் மற்றும் நிதி சாா்ந்த ஆதாரங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இடைத்தரகா்கள் மூலம் கமிஷன் அடிப்படையில் மியூல் வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, அவற்றைப் பயன்படுத்தி மோசடிப் பணத்தை மாற்றவும், எடுக்கவும் மற்றும் கிரிப்டோகரன்சி மற்றும் யுபிஐ பரிவா்த்தனைகள் உள்பட பல்வேறு வழிகளில் பயன்படுத்தவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் திட்டமிட்டனா். இது தொடா்பாக
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



