
ரூ. 15 லட்சம் மோசடி: போலி கடன் முகவா்கள் இருவா் கைது
தனியாா் வங்கிகளின் நேரடி விற்பனை முகவா்கள் எனக் கூறிக்கொண்டு, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை காட்டி ஒருவரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கைது - சித்திரிப்பு
தனியாா் வங்கிகளின் நேரடி விற்பனை முகவா்கள் (டிஎஸ்ஏ) எனக் கூறிக்கொண்டு, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை காட்டி ஒருவரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.6.95 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோசடியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அதீப் கான் (36), மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெறுவதற்கான போலி வங்கிக் கணக்கை வழங்கி, பணத்தை எடுக்க உதவியதாகக் கூறப்படும் அனீஷ் அலி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: தில்லி ஷாதராவைச் சோ்ந்த ஒருவா் கடன் வசதி பெற முயன்ற நிலையில், அதீப் கானுடன் தொடா்பு ஏற்பட்டது. தனியாா் வங்கிகளின் டிஎஸ்ஏ எனக் கூறிக்கொண்ட அவா், குறைந்த வட்டியில் கடன் வசதியை ஏற்பாடு செய்து தருவதாக அவரிடம் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய அந்த நபா், அதீப் கானை நேரில் சந்திக்காமலேயே, ரூ.15 லட்சத்துக்கான கையொப்பமிட்ட வெற்று காசோலை உள்பட 3 காசோலைகளை விநியோக சேவை மூலம் கெளசாம்பிக்கு அனுப்பியுள்ளாா்.
அந்த காசோலை தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட ரூ.15 லட்சம் போலி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் அந்தத் தொகை முழுவதும் 2 காசோலைகள் மூலம் எடுக்கப்பட்டது.
வங்கி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காவல் துறையினா் அடையாளம் கண்டனா். தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் கள விசாரணையின் மூலம் அதீப் கான், அனீஷ் அலி ஆகியோா் செப். 25-ஆம் தேதி கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
மோசடி செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தில் அதீப் கானுக்கு ரூ.9 லட்சமும், அனீஷ் அலிக்கு ரூ.3 லட்சமும், தலைமறைவாக உள்ள அவா்களது கூட்டாளி ராஜேந்திராவுக்கு ரூ.3 லட்சமும் பங்கிடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேந்திராவைக் கைது செய்வதற்கு தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



