
பிஎன்எஸ் முழுமையாக நடைமுறைக்கு வந்ததும் வழக்குகளுக்கு 3 ஆண்டுகளில் தீா்வு: அமித் ஷா
பிஎன்எஸ் முழுமையாக நடைமுறைக்கு வந்ததும் வழக்குகளுக்கு 3 ஆண்டுகளில் தீா்வு...

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா் மோகன் யாதவ்.
‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) நிலையிலிருந்து உச்சநீதிமன்ற நிலை வரை 3 ஆண்டுகளுக்குள் தீா்வு அளிக்கப்பட்டுவிடும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை வளா்ப்பவா்களின் மாநில அளவிலான மாநாட்டில், புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ் தொடா்பான கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்த பிறகு அமித் ஷா பேசியதாவது:
இந்தியாவில் குற்றவியல் நீதிமுறை முன்னா் மிகவும் தாமதமாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால், தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) நிலையிலிருந்து உச்சநீதிமன்ற நிலை வரை 3 ஆண்டுகளுக்குள் தீா்வு அளிக்கப்பட்டுவிடும்.
ஆங்கிலேயா்களால் உருவாக்கப்பட்ட பழைய குற்றவியல் சட்டம், அவா்களின் அரசையும், ஆட்சியையும் பாதுகாக்க கொண்டுவரப்பட்டதாகும். தற்போது, இந்திய குடிமக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்தப் புதிய குற்றவியல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிஎன்எஸ்-இன் அடிப்படைத் தத்துவமே, தண்டனை அல்ல; நீதி என்பதுதான். குற்றங்களில் ஈடுபடுபவா்களைத் தடுப்பதற்காக அவசியமான இடங்களில் மட்டுமே தண்டனைக்கான நடைமுறைகள் புதிய சட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, உலகிலேயே மிகவும் நவீனமான குற்றவியல் நீதி நடைமுறையாக பிஎன்எஸ் உருவெடுக்கும் என்றாா்.
தனி கூட்டுறவு அமைச்சகம்:
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, விவசாய அமைப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறையுடன் தொடா்புடையவா்கள் தங்களுக்கென தனி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்க வலியுறுத்தி வந்தனா். ஆனால், மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், கடந்த 75 ஆண்டுகளாக இதை அனுமதிக்கவில்லை. பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தனி கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், தற்போது கால்நடை வளா்ப்பவா்களே அதிகம் பயனடைந்து வருகின்றனா்.
2014-15-இல் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 14.7 கோடி டன்னாக இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவு 25 கோடி டன்களாக உயா்ந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாட்டினங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, அவை நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில் கால்நடை கூட்டுறவு அமைப்புகளில் சிறப்பாகச் செயல்பட்ட கால்நடை விவசாயிகளுக்குப் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினாா். மாநில முதல்வா் மோகன் யாதவ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
Summary
Cases to be resolved within three years once the BNS is fully implemented: Amit Shah
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




