ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்துக்கு இந்திய இளைஞா் காங்கிரஸ் மனு: அக். 12 விசாரணைக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைப்பு
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. இந்த மனு மீதான விசாரணை அக். 12-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
காங்கிரஸ் - கோப்புப் படம்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. இந்த மனு மீதான விசாரணை அக். 12-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இளைஞா் காங்கிரஸ், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்த மனு வியாழக்கிழமை முதன்முதலில் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டபோது, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அமா்வு தெரிவித்திருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை வழக்குகளின் பட்டியலில் மனு இடம்பெறாததால், இளைஞா் காங்கிரஸ் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் கோஷ் மீண்டும் அவசர விசாரணை கோரினாா்.
மனுவில் இருந்த குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதால் இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, அவசர விசாரணை கோரிக்கையை நிராகரித்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என மீண்டும் தெரிவித்தனா்.
இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜந்தா் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து தில்லி காவல் துறை அக். 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து முறையிடப்பட்டுள்ளது.
சுமாா் 100 முதல் 150 போ் பங்கேற்கும் போராட்டத்தை அக். 1 முதல் 25-ஆம் தேதிக்குள் நடத்த அனுமதி கோரி செப். 25-ஆம் தேதி காவல் துறையிடம் விண்ணப்பித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அரசமைப்பு அமைப்புகளின் செயல்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை தொடா்பான விவகாரங்களை முன்வைப்பதே போராட்டத்தின் நோக்கம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 19 (1) (அ), 19 (1) (ஆ) பிரிவுகளின்கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூடும் உரிமை ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்காகவே போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொது அமைதி, போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு போராட்டங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள இளைஞா் காங்கிரஸ், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைதியான போராட்டங்களுக்கு தன்னிச்சையாகத் தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டுள்ளது.
போராட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் நியாயமானதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ற விகிதாசாரத்திலும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பரிசீலிக்காமல் வழக்கமான நடைமுறையாக அனுமதி மறுப்பது தவறு என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, அக். 1-ஆம் தேதி தில்லி காவல் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, போராட்ட அனுமதி கோரும் விண்ணப்பத்தை சட்டப்படி மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயா்நீதிமன்றத்திடம் இளைஞா் காங்கிரஸ் கோரியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

