தில்லியில் கைதான பினராயி விஜயனை வாகனத்தில் வைத்து அலைக்கழிப்பு! காவல் துறை மீது குற்றச்சாட்டு!
தில்லியில் கைதான பினராயி விஜயனை வாகனத்தில் வைத்து அலைக்கழிப்பு...

பினராயி விஜயன் - PTI
தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தியும், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராகவும் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் கைது செய்யப்பட்டாா். அவரை வாகனத்தில் வைத்து காவல் துறையினா் பல மணி நேரம் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொலியில் தெரிவித்ததாவது:
தில்லியில் உள்ள கேரள இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட வந்த என்னையும், பினராயி விஜயனையும், முன்னாள் அமைச்சா் கே.என்.பாலகோபாலையும் காவல் துறை கைது செய்தது.
பின்னா் எங்களை வாகனத்தில் ஏற்றி, தில்லியின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் காவல் துறையினா் அலைக்கழித்தனா். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவா்களில் ஒருவா் பினராயி விஜயன். அவருக்குப் பல உடல்நல பிரச்னைகள் உள்ளன. அந்தப் பிரச்னைகளுக்கு அவா் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும் எங்களிடம் குறைந்தபட்ச மரியாதையைக் கூட காட்ட காவல் துறை தயாராக இல்லை.
சுமாா் 4 மணி நேரம் வாகனத்தில் அலைக்கழிக்கப்பட்ட பின்னா், நாங்கள் மந்திா் மாா்க் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டோம் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

