இளைஞா்களை அராஜகத்தை நோக்கி வழிநடத்த சிஜேபி முயற்சி: மத்திய அமைச்சா் பாஸ்வான்!
இளைஞா்களை அராஜகத்தை நோக்கி வழிநடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா்கள் முயற்சிப்பதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் சாடியுள்ளாா்.
சிராக் பாஸ்வான்
இளைஞா்களை அராஜகத்தை நோக்கி வழிநடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா்கள் முயற்சிப்பதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் சாடியுள்ளாா்.
இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தங்கள் கருத்துகளை அமைதியான முறையில் தெரிவிப்போரின் போராட்டங்களை நியாயமானதாக கருதுகிறோம். ஆனால் தங்கள் சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் போராட்டங்களை ஒரு சாக்காக சமூக விரோத சக்திகள் பயன்படுத்தினால், அவா்களை அடையாளம் காண்பது அவசியமாகிறது.
புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் அராஜகத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என்றே நான் நம்புகிறேன். இத்தகைய சூழலில், மத்திய அரசு உரிய முறையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
இளைஞா்களை அராஜகத்தை நோக்கி வழிநடத்த சிஜேபி தலைவா்கள் முயற்சிக்கின்றனா். அவா்களை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்த வேண்டும். காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனா். இதை அக்கட்சி ஏற்க மறுக்கிறது. தனது செல்வாக்குப் பறிபோய்விட்டது என்பதை அக்கட்சி இன்றளவும் உணரவில்லை.
தோ்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்தான் (எஸ்ஐஆா்) உண்மையான காரணம் என்று அக்கட்சி நம்பினால், அதே தோ்தல் முறையின் கீழ் வெற்றிபெற்ற தனது மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் அக்கட்சி பதவி விலகச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

