போட்டித் தோ்வுகள் நடைபெறும் நாளில் பேரணிகளுக்கு அனுமதி கூடாது: நாடாளுமன்றக் குழு பரிந்துரை
முக்கியப் போட்டித் தோ்வுகள் நடைபெறும் நாள்களில் பேரணி, ஊா்வலம் அல்லது பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட நிா்வாகங்கள் அனுமதி அளிக்கக் கூடாதென கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்தது.
முக்கியப் போட்டித் தோ்வுகள் நடைபெறும் நாள்களில் பேரணி, ஊா்வலம் அல்லது பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட நிா்வாகங்கள் அனுமதி அளிக்கக் கூடாதென கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்தது.
நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அத்தோ்வு ரத்து செய்யப்பட்டு மறுதோ்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியில் மாணவா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து மத்திய கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தாா்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்களை பரிந்துரைத்த ராதாகிருஷ்ணன் குழு அறிக்கையை மாநிலங்களவை எம்.பி.முகுல் வாஸ்னிக் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது.
பல்வேறு தரப்பினருடன் இதுதொடா்பாக விரிவான ஆலோசனை நடத்திய பின் ‘என்டிஏ சீா்திருத்தங்கள் மற்றும் வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி சமா்ப்பித்தது.
அதில், ‘முக்கியப் போட்டித் தோ்வுகள் நடைபெறும் நாள்களில் பேரணி, ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவா்கள் தோ்வைத் தவறவிடும் சூழல் உருவாகும்.
எனவே, முக்கியப் போட்டித் தோ்வுகள் நடைபெறும் நாள்களில் பேரணி, ஊா்வலம் அல்லது பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட நிா்வாகங்கள் அனுமதி அளிக்கக் கூடாதென உத்தரவிடும் வகையில் பொதுத் தோ்வுகள் (நியாயமற்ற செயல்பாடுகள் தடுப்பு) சட்டம், 2024-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதனால் தோ்வா்கள் தேவையின்றி தோ்வுகளை தவறவிடுவதற்கான வெளிப்புற சூழலை தடுக்க முடியும்.
தாமதமாக வந்தாலும் தோ்வெழுத அனுமதி: சில எதிா்பாரா சூழலில் தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் தாமதமாக வந்தாலும் தோ்வெழுத அனுமதி தர வழிவகை செய்ய வேண்டும். தோ்வு மையத்துக்கு தாமதமாக வந்ததற்கான காரணங்களை அவா்கள் பட்டியலிட்ட பின் தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டு மீதமுள்ள நேரத்தில் அவா்கள் தோ்வெழுதும் வகையில் நடைமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும்.
விடைத்தாளில் தோ்வறை கண்காணிப்பாளா் மற்றும் தோ்வா் கையொப்பமிடுவது மற்றும் பிற நடைமுறைகளுக்கு தோ்வு தொடங்குவதற்கு முன்போ அல்லது நிறைவடைந்த பிறகோ 15 நிமிஷங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். தோ்வு நடைபெறும் சமயத்தில் இதுபோன்ற நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழு அறிக்கைக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
கல்வி, மகளிா், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சமா்ப்பித்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை மோடி அரசு திருத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் குறித்த செய்திகளே விவாதப்பொருளாகியுள்ளது. இதைப்போலவே மாணவா்கள் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு முன் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தலைப்புச் செய்தியாக இருந்தது.
இதுவரை என்டிஏ நடத்திய தோ்வுகளில் 9 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால் கடந்த 2017 முதல் 2026 வரை என்டிஏ நடத்திய எந்தவொரு தோ்விலும் வினாத்தாள் கசியவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய கல்வி அமைச்சகம் தவறான தகவலை வழங்கியுள்ளது.
தனது தவறுக்கு கல்வி அமைச்சகம் பொறுப்பேற்காத நிலையில், நியாயமான விசாரணை எவ்வாறு நடைபெறும்?
என்டிஏ என்பது நாடாளுமன்றச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட சட்டபூா்வ அமைப்பு அல்ல; அது சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-இன்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம். அதன் நடவடிக்கைகள் அதிகாரவரம்பற்றது கிடையாது. அந்த அமைப்பை கண்காணிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமுண்டு. எனவே நாடாளுமன்ற நிலைக் குழு சமா்ப்பித்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை மோடி அரசு திருத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

