அக்னி பரீட்சையில் தலைமை நீதிபதி அலுவலகம்; மக்களின் நம்பிக்கை புகலிடமாக மனித உரிமைகள் ஆணையம்!
ஒரே மேடையில் தங்களின் சவால்களைப் பகிர்ந்த நீதித் துறை ஆளுமைகள்

"இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் ஒவ்வொரு நிமிஷமும் அக்னி பரீட்சையை எதிர்கொள்கிறது' என தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியனும், "நாட்டு மக்களின் நம்பிக்கை புகலிடமாக "என்ஹெச்ஆர்சி' திகழ்கிறது' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒரே மேடையில் மற்றொருவர் எதிர்கொள்ளும் சவாலான சூழல்களை பகிர்ந்துப் கொண்டனர்.
தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33'ஆவது நிறுவன நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் அதே நிகழ்வில் பேசிய வெ.ராமசுப்பிரமணியன், தலைமை நீதிபதி அலுவலகம் ஒவ்வொரு நிமிஷமும் அக்னி பரீட்சைக்கு உள்படுத்தப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் உலகம் முழுவதும் 107 அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சுதந்திரமான நாடுகளிலேயே நடைபெற்றுள்ளன.
மனித உரிமைகள் குறித்த அணுகுமுறை முன்பு குடிமகன், அரசு ஆகிய இரு பரிமாணங்களைக் கொண்டதாக மட்டுமே இருந்தது.
ஆனால், எண்ம புரட்சிக்குப் பிறகு அரசல்லாத பிற தரப்பினரும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எண்ம உலகில் நமது கருத்துகள் பிறரால் கையாளப்படலாம், நமது சிந்தனை முறைகள் மீது செல்வாக்கு செலுத்தப்படலாம், நமது உடல் மற்றும் மன ரீதியிலான செயல்பாடுகள் இரண்டும் கண்காணிக்கப்படலாம். இந்த ஆபத்தான போக்கைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையம் தனது நிறுவன நாளைக் கொண்டாடும் இந்தத் வேளையில், புதிய சவால்களை எதிர்கொள்ள நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவும், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்கான நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தவும், நமது சேவையை மேம்படுத்த நமது ஆளுமைகளை மறுசீரமைக்கவும் உறுதியேற்க வேண்டிய நேரம் இது என்றார் வெ.ராமசுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசியதாவது: என்ஹெச்ஆர்சி அதன் 33 ஆண்டு கால பயணத்தில் 24 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்து, அதில் 23 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளது.
அதன் தீர்வு விகிதம் 98 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது பாராட்டுக்குரியது. பாதிக்கப்படுவோரின் "நம்பகமான புகலிடமாக' என்ஹெச்ஆர்சி வளர்ந்துள்ளது. ஒரு மனித உரிமைகள் அமைப்பின் உண்மையான அளவுகோல் அது விசாரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் அல்ல. மாறாக தங்களின் குரலைப் பதிவு செய்ய இயலாத எளிய மக்களின் குரல் அங்கே கேட்கப்படுகிறதா என்பதே அதன் உண்மையான அளவுகோல்.
மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்காக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியக் கேள்வியாகும் என்றார் தலைமை நீதிபதி சூர்ய காந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

