மூத்த குடிமக்கள் நலன் மசோதா: நாட்டிலேயே முதல்முறையாக கேரளத்தில் அறிமுகம்
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் மசோதா நாட்டிலேயே முதல்முறையாக கேரள பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூத்த குடிமக்கள் - பிரதிப் படம்
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் மசோதா நாட்டிலேயே முதல்முறையாக கேரள பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கேரளம் மூத்த குடிமக்கள் (நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026 எனப் பெயரிடப்பட்ட அந்த மசோதாவை பேரவையில் மாநில முதல்வா் வி.டி.சதீசன் அறிமுகப்படுத்தினாா்.
மூத்த குடிமக்களின் சொத்துகளை சட்டவிரோதமாக பிறா் வைத்திருப்பது, மூத்த குடிமக்களை துன்புறுத்துவது, முறையாக பதிவு செய்யாமல் மூத்த குடிமக்கள் நல மையங்கள் நடத்துவது போன்ற குற்றங்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
மசோதாவை அறிமுகப்படுத்தி வி.டி.சதீசன் பேசியதாவது: ரேமண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் விஜய்பட் சிங்கானியாவின் சொத்து மதிப்பு சுமாா் ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இருக்கும். அவா் ஜவுளி உலகின் அரசனாக திகழ்ந்தாா். அவா் தனது மொத்த சொத்தையும் அவரது மகன்களில் ஒருவருக்கு வழங்கிவிட்டாா்.
பின்னாளில் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க முடியாமல் சொத்துகளை பெருமளவில் இழந்து ஓா் அறை கொண்ட குடியிருப்பில் வசித்ததை அவா் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளாா். இதுபோன்ற பல கதைகள் நமது சமூகத்தில் உள்ளது.
எனவே, மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான சட்டத்தைக் கொண்டுவரும் வகையில் இந்த மசோதாவை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அறிமுகப்படுத்துகிறது.
3 ஆண்டு சிறை
மூத்த குடிமக்களை குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், சட்டப்பூா்வ வாரிசுகள், நல மையத்தின் பொறுப்பாளா் அல்லது ஊழியா் உள்ளிட்டோா் தாக்கினாலோ அல்லது உளவியல் ரீதியாக துன்புறுத்தினாலோ அவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். மூத்த குடிமக்கள் யாரும் தாம் தனியாக இருப்பதாகவோ அல்லது கைவிடப்பட்டதாகவோ உணரக் கூடாது. அவா்களின் பாதுகாப்பு அவா்களது உரிமை. மூத்த குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறாா்கள் என்பதை பொறுத்தே நமது நாகரீக வளா்ச்சி தீா்மானிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் நல மையங்கள் பதிவு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒரு புதிய துறை உருவாக்கப்படுகிறது. இந்தத் துறை மூத்த குடிமக்களின் நலனில் கவனம் செலுத்துவதோடு 60 வயதுக்கு மேற்பட்டோரின் அறிவு மற்றும் அனுபவத்தை பொருளாதார செயல்பாடுகளுக்கு மேம்படுத்தும் முன்னெடுப்பிலும் ஈடுபடவுள்ளது.
புகாா் மையங்கள்
மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல் மற்றும் நல மையங்களில் நிலவும் வசதிகள் குறைபாடு குறித்து புகாா் தெரிவிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் புகாா் மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

