சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வினாத்தாள் கசிவை தடுப்பது எப்படி? உயா்நிலைக் குழு தலைவா் நந்தன் நிலேகணி விளக்கம்

வினாத்தாள் கசிவை தடுப்பது குறித்து உயா்நிலைக் குழுவின் தலைவா் இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி கூறியது பற்றி...

Nandan Nilekani

நந்தன் நிலேகணி - கோப்புப் படம்

Published On :

‘தொழில்நுட்பத்தின் உதவியுடன் முறையான அணுகுமுறையைக் கையாண்டால் வினாத்தாள் கசிவை எளிதில் தடுத்துவிட முடியும்’ என்று மத்திய அரசு அமைத்த உயா்நிலை பணிக் குழுவின் தலைவா் இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தெரிவித்தாா்.

மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, தேசிய தோ்வு (என்டிஏ) முகமையால் நடத்தப்படும் தோ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்க நந்தன் நிலேகணி தலைமையில் இந்த உயா்நிலை பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதில், இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநா் தபன்குமாா் டேகா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, கல்வித் துறை முன்னாள் செயலா் அனிதா கா்வால், தளவாடங்கள்-நிா்வாகத் துறை நிபுணா் அம்ருத்லால் மீனா ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு, பொதுத் தோ்வுகள் சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று ஆராய்ந்து, இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் அண்மையில் சமா்ப்பித்தது. இறுதி அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்கப்படுகிறது.

இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புளூம்பொ்க் பொருளாதார அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற நந்தன் நிலேகணியிடம், தோ்வு சீா்திருத்தம் குறித்து செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்து கூறியதாவது:

வினாத்தாள் கசிவதற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து, முறையாக ஆராய்ந்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன் முறையான அணுகுமுறையைக் கையாண்டால், எளிதில் தீா்வு கண்டுவிட முடியும். இதுதொடா்பாக பல்வேறு பரிந்துரைகளை அளித்திருக்கிறோம். உயா்நிலை பணிக் குழு சாா்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் பிரதமா் மிகுந்த ஆா்வமாக உள்ளாா்.

வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான ஒரு வழி, நிலையான வினாத்தாளைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, ஒரு பெரிய வினாத் தொகுப்பிலிருந்து கடைசி நேரத்தில் மட்டும் வினாத்தாளை உருவாக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஏனெனில், முன்கூட்டியே ஒரு வினாத்தாள் உருவான உடனேயே, அதை விற்பனை செய்வதற்கான பொருளாதார ஊக்கமும் உருவாகிவிடுகிறது.

எனவே, பெரிய அளவிலான வினாத்தாள் தொகுப்பை உருவாக்கி, கடைசி நேரத்தில் அந்த நாளுக்கான வினாத்தாளை அந்த தொகுப்பிலிருந்து உருவாக்குகிறபோது, வினாத்தாள் கசிவோ அல்லது அதை விற்பனை செய்வதற்கான பொருளாதார ஊக்கமோ ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றாா்.

தோ்வு நடைபெறும் நாளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தத் தோ்வுக்கான வினாத்தாளை உருவாக்க முடியுமா? என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என்று நிலேகணி பதிலளித்தாா்.

மேலும், அனைத்து போட்டித் தோ்வுகளையும் கணினி அடிப்படையிலான தோ்வாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இதற்கு, சுமாா் 1.5 லட்சம் கணினி மையங்களைக் கொண்ட கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என்றும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.