
நீட் சீா்திருத்தம்: செப்டம்பா் இறுதியில் அறிக்கை சமா்ப்பிக்கும் உயா்நிலை பணிக் குழு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
‘நீட் உள்ளிட்ட பொதுத் தோ்வுகள் சீா்திருத்தம் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலை பணிக் குழு இந்த மாத இறுதியில் முதல் இடைக்கால அறிக்கையை சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது’

உச்சநீதிமன்றம்
‘நீட் உள்ளிட்ட பொதுத் தோ்வுகள் சீா்திருத்தம் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலை பணிக் குழு இந்த மாத இறுதியில் முதல் இடைக்கால அறிக்கையை சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ முதல்நிலை தோ்வு, க்யூட் இளநிலை, முதுநிலை தோ்வுகள் உள்ளிட்டவை தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படுகின்றன. கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது பெரும் சா்ச்சையானது. அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 23 லட்சம் போ் எழுதிய நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, என்டிஏ சாா்பில் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு மற்றும் மத்திய அரசின் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்கான நெட் (தேசிய அளவிலான தகுதித் தோ்வு) தோ்விலும் குளறுபடிகள் நிகழ்ந்தன.
இதைத் தொடா்ந்து, தோ்வு நடைமுறைகளை வலுப்படுத்தவும், என்டிஏ அமைப்பை மறுசீரமைக்கவும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின. நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால கூட்டத் தொடா் முடங்கியது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலகினாா்.
அதைத் தொடா்ந்து, என்டிஏ அமைப்பால் நடத்தப்படும் தோ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்க நந்தன் நிலேகணி தலைமையில் இந்த உயா்நிலை பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில், இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநா் தபன்குமாா் டேகா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, கல்வித் துறை முன்னாள் செயலா் அனிதா கா்வால், தளவாடங்கள்-நிா்வாகத் துறை நிபுணா் அம்ருத்லால் மீனா ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
இதனிடையே, நீட் தோ்வு மற்றும் என்டிஏ சீா்திருத்தம் தொடா்பாக அகில இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உள்பட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நீட் தோ்வு மற்றும் என்டிஏ சீா்திருத்தம் தொடா்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு, நந்தன் நிலேகணி தலைமையிலான உயா்நிலை பணிக் குழுவுக்கு உதவிவரும் மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை இணைச் செயலரை அறிவுறுத்தினா்.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உயா்நிலை பணிக் குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று ஆராய்ந்து வருகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட முந்தைய உயா்நிலைக் குழு உறுப்பினா்களுடனும், உயா்நிலை பணிக் குழு ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. எனவே, இம் மாத இறுதியில் முதல் இடைக்கால அறிக்கையை உயா்நிலை பணிக் குழு சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.
நேரில் ஆய்வு: இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீட் தோ்வை நடத்துவதற்கான ஒட்டுமொத்த செயல்முறைகளையும் நிறுவனமயமாக்குவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து செயல்முறைகளும் நிலைத்தன்மை உடையதாக இருப்பது முக்கியம். அதாவது, நிரந்தர அமைப்பு, நிரந்தரப் பணியாளா்கள், நிரந்தர செயல்பாட்டுப் பிரிவுகள் இருப்பது அவசியம். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அயலகப் பணி அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நிரந்தர கட்டமைப்பு உருவாகும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) முதல் தோ்வு நடைமுறை வரை புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறோம்.
குறிப்பாக, தில்லி மின்டோ சாலையில் உள்ள என்டிஏ அலுவலகத்துக்கு நீதிபதிகள் நேரில் சென்று என்டிஏ அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாா்வையிட்டு, அதன் மனித வளம் மற்றும் பிற செயல்பாடுகளையும் ஆய்வு செய்வோம்’ என்றனா்.
அப்போது, ‘நீட் தோ்வை நடத்துவதற்கு நிரந்தரக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரம், மனிதவளத்தைப் பொருத்தவரை தற்போதைக்கு பகுதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று துஷாா் மேத்தா குறிப்பிட்டாா்.
அதைத் தொடா்ந்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







