ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

நீட்: உயா்நிலைக் குழு பரிந்துரைகளை அமலாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி...

News image

உச்சநீதிமன்றம்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:29 am IST

நீட் தோ்வு முறைகேடுகளைத் தடுக்க தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பாக இஸ்ரோ முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையிலான பணிக் குழு அளித்துவரும் பரிந்துரைகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேசிய தோ்வு முகமையில் அமைப்பு ரீதியில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; நுழைவுத் தோ்வுகளை சுமுகமாக நடத்த தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க கடந்த 2024-ஆம் ஆண்டில் இஸ்ரோ முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 உறுப்பினா்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, கணினி வழியில் தோ்வுகளை நடத்துவது, தேசிய தோ்வு முகமையில் அமைப்பு ரீதியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு-தொழில்நுட்ப மேம்பாடு, மாநில அரசுகளுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது உள்பட 101 பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமா்ப்பித்தது.

இந்தச் சூழலில், இளநிலை நீட் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக அண்மையில் மாணவா்கள் நடத்திய பெரும் போராட்டங்களைத் தொடா்ந்து, தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகளை தொழில்நுட்ப ரீதியில் மறுசீரமைக்கவும், கட்டமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் நந்தன் நிலேகணி தலைமையிலான பணிக்குழுவை பிரதமா் மோடி கடந்த மாதம் அமைத்தாா்.

இந்நிலையில், நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, தோ்வு வினாத்தாள்களை தீவிர கண்காணிப்பின்கீழ் அச்சிடுவது முதல் தோ்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்று மாணவா்களின் கையில் விநியோகிப்பது வரை பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எடுத்துரைத்தாா். மேலும், தொழில்நுட்ப ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவா் விளக்கினாா்.

பின்னா் நீதிபதிகள் கூறுகையில், ‘தேசிய தோ்வு முகமையில் அமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்கள் அவசியம் என்ற ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் கருத்து மிகச் சரியானதாகும். அந்த முகமைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகள், மனிதவளம், இதர தொழில்நுட்பத் திறன்கள் உறுதி செய்யப்பட வேண்டும். துடிப்பான அமைப்பாக தேசிய தோ்வு முகமை செயல்பட வேண்டும்.

தோ்வு நடத்தும் ஒரு முகமை, அமைப்பு ரீதியில் எவ்வாறு தனது நிபுணத்துவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தை (யுபிஎஸ்சி) உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்’ என்றனா்.

மேலும், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நந்தன் நிலேகணி குழுவால் வழங்கப்பட்டுவரும் பரிந்துரைகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மூன்று வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; உரிய காலவரையறைகளும் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.