தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

பாலில் தயாரிக்கப்படாத பனீா் குறித்த பொதுநல வழக்கு: எப்எஸ்எஸ்ஏஐ பதிலளிக்க உத்தரவு

பால் அல்லாத மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பனீா்’ போன்ற பொருள்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு பதிலளிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் மத்திய அரசு மற்றும் தில்லி அரசுக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

பால் அல்லாத மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘பனீா்’ போன்ற பொருள்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு பதிலளிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) மத்திய அரசு மற்றும் தில்லி அரசுக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் டபிள்யூ. சாம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ரிதிமா சிங் மற்றும் அவலோகிதேஷ்வா் பத்மபாணி சித்தாா்த் ஆகியோா் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ் பனீா் என்பது தரப்படுத்தப்பட்ட ஒரு பால் சாா்ந்த தயாரிப்பாகும். ஆனால், பால் அல்லாத அல்லது பிற தயாரிப்பு பனீரில் பால் அல்லாத மூலப்பொருள்கள் மட்டுமே உள்ளன என்றும், அவற்றில் உண்மையான பனீரில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு இல்லை.

ஹோட்டல் அல்லது உணவகத்தில் பனீா் சாா்ந்த உணவை உட்கொள்ளும் ஒரு நபா், அந்த உணவு உண்மையான பனீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதா அல்லது பால் அல்லாத மாற்றுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள எந்த வழியும் இல்லை.

பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, சந்தையில் விற்கப்படும் பனீா் மற்றும் பனீா் என்று கூறப்படும் தயாரிப்புகளை அதிகாரிகள் மாதிரி எடுத்துப் பரிசோதிக்க நீதிமன்றம் அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கா் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் பால் அல்லாத பனீா் தயாரிப்புகளுக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளன. தில்லியில் பால் அல்லாத மாற்றுப் பனீா் தயாரிப்பு, விநியோகம், விற்பனை அல்லது பரிமாறுதல் ஆகியவற்றைத் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல், ஹோட்டல்கள், உணவகங்கள், கேட்டரிங் சேவைகள், சிற்றுண்டி நிலையங்கள், கிளவுட் கிச்சன்கள் மற்றும் இணையவழி உணவு வணிகங்கள் ஆகியவை தங்கள் உணவில் பால் அல்லாத மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்துத் தெளிவான தகவல்களை வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மாற்றுப் பொருள் அல்லது பால் அல்லாத பொருள் என்று சரியாகக் குறிப்பிடப்பட்ட ஒரு தயாரிப்பைத் தெரிந்து வாங்கும் நுகா்வோா், ஒரு தெளிவான முடிவை எடுக்கிறாா். ஆனால், பனீா் என்று கேட்டு வாங்கும் அல்லது ஆா்டா் செய்யும் நுகா்வோா், சட்டரீதியாக வரையறுக்கப்பட்ட பனீருக்கான தகுதிகளைக் கொண்ட தயாரிப்பையே பெற உரிமை உடையவா். மாறாக, பாலின் அத்தியாவசியக் கூறுகள் தாவரக் கொழுப்பு, தாவர எண்ணெய் அல்லது பால் அல்லாத பிற பொருள்களால் தயாரிக்கப்பட்ட பொருளை அது குறித்து அறியாமலேயே அவருக்கு வழங்குவது கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.